கரூர்: கரூரில் 41 ேபர் பலியான வழக்கு தொடர்பாக விஜய் பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து கரூருக்கு கொண்டு வந்து ஆய்வு மேற்கொண்டனர். கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அக்டோபர் 16ம் தேதி முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டிசம்பர் 29, 30, 31 ஆகிய நாட்களில் தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொது செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரை டெல்லிக்கு வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் 12ம் தேதி (நாளை மறுநாள்) ஆஜராகும்படி கடந்த 6ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி விசாரணைக்கு ஆஜராக விஜய் நாளை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இதனிடையே நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தடயவியல் துறை அதிகாரிகள், டெல்லி எய்ம்ஸ் மருத்துவ அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர், சம்பவம் நடந்த வேலுசாமிபுரத்துக்கு வந்து உயர்ரக தொழில்நுட்ப கேமரா உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் சென்னையில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜயின் பிரசார வாகனத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். இந்த வாகனம் நேற்றிரவு கரூருக்கு கொண்டு வரப்பட்டு, சிபிஐ முகாம் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது.
இந்த வாகனத்தை இன்று சிபிஐ அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பேருந்தில் உள்ள சிசிடிவியின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தனர். மேலும் அந்த வாகன ஓட்டுனரையும் வரவழைத்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 41 பேர் பலியான போது இந்த வாகனத்தில் இருந்து தான் விஜய் பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
