கல்வியாளர்கள் வலியுறுத்தல் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு ரூ.22.50 லட்சம் நலஉதவி

புதுக்கோட்டை, ஜன. 26: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு கொரோனா சிறப்பு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி கலெக்டர் உமா மகேஸ்வரி பேசியதாவது: தமிழக அரசு, உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்தல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருவரங்குளம், அறந்தாங்கி, விராலிமலை வட்டாரங்களை சார்ந்த 172 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மூலம் திட்ட ஊராட்சிகளில் சுய உதவிக்குழு உறுப்பினர் மற்றும் உறுப்பினர் குடும்பங்களை சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஊரக தொழில்களை மேம்படுத்துவதற்காகவும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோரால் மேற்கொள்ளப்படும் வாழ்வாதார தொழிலை மேம்படுத்துவதற்காக துவக்கி வைக்கப்பட்டது. இதேபோல் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தொழில் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள், பிறபகுதிகளுக்கு புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு புதிதாக தொழில் துவங்கவும், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின்கீழ் சிறப்பு நிதியுதவி தொகுப்பு திட்டம் தமிழக முதல்வரால் ஏற்கனவே துவக்கி வைக்கப்பட்டது.

அந்த வகையில் இத்திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பு திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை, அறந்தாங்கி, விராலிமலை, திருவரங்குளம் வட்டாரங்களை சேர்ந்த 4 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.12 லட்சம் நிதியுதவி தொகைக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. மேலும் திருவரங்குளம் வட்டாரம் வெண்ணாவல்குடி ஊராட்சியில் 2 உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பில் நிதியுதவி தொகைக்கான காசோலை, புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை, திருவரங்குளம் வட்டாரத்தை சேர்ந்த 6 ஊராட்சிகளில் உள்ள 8 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.8 லட்சம் மதிப்பில் உதவித்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் இதுபோன்ற நலத்திட்ட உதவிகளை பெறும் பயனாளிகள் உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் வசந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

More