துபாய்: ஈரானில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய இந்த போராட்டங்கள், நாட்டின் 31 மாகாணங்களுக்கும் பரவியுள்ளன. மேலும் அரசு கட்டிடங்கள், பஸ்கள், மெட்ரோ ரயில்களுக்கு தீ வைப்பது போன்ற செயல்களில் போராட்டக்காரர்கள் இறங்கியுள்ளனர். நேற்றும் நாட்டின் பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்கள் சர்வாதிகாரமே ஒழிக என முழக்கமிட்டனர்.
பற்றிஎரியும் போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதல்களில், 62 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் பாதுகாப்பு படையினரால் 2270 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து ஈரானில் இணைய சேவைகள் கடுமையாகக் குறைந்துள்ளதாக உலகளாவிய இணைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நெட்ப்ளாக்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
* ஈரான் உச்ச தலைவரை டிரம்ப் கொன்றுவிடுவார்
அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரகாம் பேட்டியளிக்கையில், ஈரானில் மக்கள் போராட்டங்களை ஒடுக்க வன்முறையை கையாண்டால் அதிபர் டிரம்ப் ஈரான் உச்ச தலைவர் காமேனியை கொல்லவும் தயங்க மாட்டார் என்றார்.
* போராட்டக்காரர்களுக்கு ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஈரான் தலைவர் அயதுல்லா காமேனி தெஹ்ரானில் தனது இல்ல வளாகத்தில் கூடியிருந்தவர்கள் மத்தியில் நேற்று பேசுகையில், அமெரிக்க அதிபரை மகிழ்விப்பதற்காக தங்கள் சொந்த தெருக்களை நாசமாக்குகிறார்கள். ஏனென்றால் அவர்(டிரம்ப்) அவர்களுக்கு உதவுவதாகக் கூறினார். அதற்கு பதிலாக அவர்(டிரம்ப்) தனது சொந்த நாட்டின் நிலை பற்றி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
