×

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொண்டி அருகே இன்று கரை கடக்கிறது: 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை: இலங்கைக்கு தென் கிழக்கில் கோடியக்கரை தென்கிழக்கே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது புயலாக மாறவும் வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் சின்னம் நேற்று மாலையில் இலங்கை அருகே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டது. இந்த புயல் சின்னம் நேற்று காலையில் இலங்கையில் மட்டக்களப்பு பகுதிக்கு கிழக்கு- தென்கிழக்கு பகுதியில் 150 கிமீ தொலைவிலும், திரிகோண மலைக்கு தென் கிழக்கே 200 கிமீ தொலைவிலும் காரைக்காலுக்கு தென் கிழக்கே 500 கிமீ தொலைவிலும் சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 700 கிமீ தொலைவிலும் நிலை கொண்டது. நேற்று இரவு வரை இலங்கைக்கு கிழக்கே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்தது. பின்னர் மேற்கு – வட மேற்கு திசையில் நகர தொடங்கியது. அது இன்று காலை தொண்டி அருகே கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக இன்று திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். நாளையும் செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் நேற்று காலை முதல் மாலை வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்காற்று வீசியது. இன்று சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Tags : Thondi ,Chennai ,Kodiyakarai ,Sri Lanka ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...