நாகர்கோவில்: தமிழ்நாட்டை மையமாக வைத்து அதிக ரயில்கள் இயக்க வசதியாக கன்னியாகுமரியில் மெகா ரயில் முனையம் அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு பொருளாதாரம் உள்பட பல்வேறு துறைகளில் வேகமாக முன்னேறி வரும் நிலையில், ரயில் போக்குவரத்தில் இன்னும் பெரும் பின்னடைவு மாநிலமாகவே உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ் நாட்டுக்கு இயக்கப்பட்ட புதிய ரயில்கள் என்று மிகவும் குறைவு ஆகும். இதில் மொத்த மக்கள் தொகையில் 90 சதவீத மக்கள் பயணம் செய்யும் சாதாரண எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் தினசரி ரயில்கள் என்று பார்த்தால் வெறும் நான்கு ரயில்கள் மட்டுமே உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் புதிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்காத காரணத்தால் பயணிகள் தேவை பல மடங்கு அதிகரித்து உள்ளது. தமிழ்நாட்டில் புதிய ரயில்கள் இயக்க வேண்டும் என்று ரயில்வே அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தால் ரயில் பெட்டிகள் பற்றாகுறையாக உள்ளது. ரயில் எஞ்சின் பற்றாக்குறையாக உள்ளது. இருப்பு பாதை ஒருவழிப்பாதையாக உள்ளது. ரயில் முனையம் இடநெருக்கடியாக உள்ளது என்று சப்பை சாக்குபோக்கு சொல்லி காலம் கடத்துவதை வாடிக்கையாக உள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஒரே ஆண்டில் 2013-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் சென்னை – தஞ்சாவூர் தினசரி ரயில், சென்னை – பழநி தினசரி ரயில், சென்னை – வேளாங்கண்ணி தினசரி லிங்க் ரயில், கோவை – மன்னார்குடி தினசரி ரயில், நாகர்கோவில் – பெங்களூர் தினசரி ரயில், பழநி – திருச்செந்தூர் தினசரி ரயில் என 6 தினசரி ரயில்கள் ஒரே ஆண்டில் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டது.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் அது இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை வெறும் மூன்றே ஆகும். கடந்த 10 ஆண்டுகளாக 2015-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் என்பது மொத்தம் நான்கு தான் உள்ளது. கொல்லம் – சென்னை தினசரி இரவு நேர ரயில் (இந்த ரயில் மீட்டர் கேஜ் காலகட்டத்தில் இயக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது), ராமேஸ்வரம் – தாம்பரம் தினசரி இரவு நேர ரயில், கன்னியாகுமரி – திப்ருகர் வாராந்திர ரயில் வட இந்தியாவிலிருந்து வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வந்து வேலை செய்ய வசதியாக வேண்டி தினசரி ரயிலாக இயக்கப்பட்டது. நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா தினசரி ரயில் ( முன்பதிவு அற்ற ரயில் – நடுத்தர மற்றும் ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளது) ஆகியவை இந்த 4 ரயில்கள் ஆகும்.
இந்திய ரயில்வே அமைச்சர் அடுத்த 5 ஆண்டுகளில் முக்கிய 48 நகரங்களில் ரயில் முனைய திறனை இரட்டிப்பாக்க திட்டம் இருப்பதாக அறிவித்துள்ளார். பயணிகளின் தேவையின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, புதிய ரயில்களை தொடங்கும் முக்கிய நகரங்களின் திறன் அடுத்த 5 ஆண்டுகளில் தற்போதைய அளவிலிருந்து இரட்டிப்பாக்கப்பட வேண்டும். இவ்வாறுதான் ரயில்வே அமைச்சர் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1000 வழித்தடங்களில் புதிய ரயில்கள் புதிதாக இயக்கப்படும் என்று என அறிவித்துள்ளதற்கு, ரயில்வே பயணிகள் சங்கங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளன. போதிய ரயில்கள் இல்லாத காரணத்தால் வார விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ரயில்களில் இருக்கைகளுக்கு போட்டா போட்டி ஏற்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே அதிகளவில் அறிவித்து இயங்கி வருகின்றது. இதனால் அதிக கட்டணத்தில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
வரும் ஆண்டுகளில் தேவைகளை பூர்த்தி செய்ய தற்போதைய உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். 2030 ஆம் ஆண்டுக்குள் தொடக்க திறனை இரட்டிப்பாக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கூடுதல் ரயில்கள் இயக்க அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிகவும் முக்கியமாகும். திருநெல்வேலியில் 16 முதல் 20 பெட்டிகள் நீளம் கொண்ட மெமு ரயில்கள் பராமரிப்பு பணிமனை அமைக்க வேண்டும். தற்போது ரயில் பெட்டிகள் பராமரிப்பு செய்யும் மதுரை, நாகர்கோவில், திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், ராமேஸ்வரம், தாம்பரம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் கூடுதல் பிட்லைன்கள் நடைமேடைகள் அமைக்க வேண்டும். மும்பையை தலைமையிடமாக கொண்ட மத்திய ரயில்வே மும்பையில் அடுத்த 100 ஆண்டுகளை கணக்கில் கொண்டு மெகா முனையங்களை அமைத்து வருகிறது. இதைப்போல் தெற்கு ரயில்வேயில் மெகா ரயில்வே முனையங்களை அமைக்க வேண்டும்.
தற்போது ரயில் பெட்டிகள் பராமரிப்பு இனி 2000 கி.மீ லிருந்து 3000 கி.மீ ஆகவும் ரயில் பராமரிப்பு நேரத்தை 8 மற்றும் 6 மணி நேரத்திலிருந்து 5 மற்றும் 3 மணி நேரமாக குறைக்கும் திட்டம் உள்ளது. இவ்வாறு செய்யும் போது தற்போது உள்ள ரயில்களின் பராமரிப்பு பணிகள் வெகுவாக குறையும். இவ்வாறு குறையும் போது எளிதாக அனைத்து ரயில் பெட்டிகளையும் தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை அருகே மற்றும் கன்னியாகுமரி அருகே என்று இரண்டு மெகா முனையம் ஏற்படுத்தி அனைத்து ரயில் பெட்டிகளையும் இந்த இரண்டு முனையங்களுக்கு கொண்டு வந்து எளிதாக பராமரிப்பு பணிகள் செய்ய முடியும். இவ்வாறு செய்யும் போது ரயில்பெட்டிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் தேவை குறையும் என ரயில் தொழிலாளர்கள் சங்கங்கள் கூறி உள்ளன.
கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்றால் அதிக அளவில் ரயில் இஞ்சின் தேவைப்படும் ஆகவே நாங்குநேரியில் ரயில் இஞ்சின் தொழிற்சாலை அமைக்க வேண்டும். கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும் என்றால் அதிக அளவில் ரயில் பெட்டிகள் தேவைப்படும் ஆகவே திருச்சியில் உள்ள பொன்மலை தொழிற்சாலையை அதிக அளவில் மெமு ரயில்கள் இயக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் மெமுரயில் பெட்டிகள் தொழிற்சாலையாக மாற்றம் செய்ய வேண்டும். சென்னை முதல் கன்னியாகுமரி மற்றும் சென்னை முதல் கோவை வரை உள்ள இருப்புபாதையை மூன்று மற்றும் நான்காவது வழிபாதையாக மாற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒன்றை பாதையாக உள்ள அனைத்து இருப்பு பாதைகளை உடனடியாக போர்க்கால நடவடிக்கையான இரட்டை பாதையாக மாற்றம் செய்ய வேண்டும்.
சென்னை முதல் கன்னியாகுமரி மற்றும் சென்னை முதல் கோயம்பத்தூர் வரை உள்ள இருப்புபாதையை தானியங்கி சிக்னல் ஆக மாற்றம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். சென்னை முதல் கன்னியாகுமரி மற்றும் சென்னை முதல் கோவை வரை உள்ள இருப்பு பாதையின் வேகத்தை மணிக்கு 180 கி.மீ வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கு ஏற்றவாறு மாற்றம் செய்ய வேண்டும். அதிக மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த பகுதிகளான திருநெல்வேலி , திருவனந்தபுரம் பாதையில் பகல் நேரத்தில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு மெமு ரயில் வீதம் இயக்குவதற்கு வசதியாக அடிப்படை கட்டமைப்பு வசதிகளை எற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை பல கோடி செலவில் அமித்பாரத் என்ற பெயரில் வேலைகள் நன்றாக நடைபெறுகிறது. இந்த நிதியை கொண்டு கூடுதல் ரயில்கள் இயக்க தேவையான கட்டமைப்பு வசதிகளை பெருக்கி அதிக அளவில் எக்ஸ்பிரஸ் சூப்பர் பாஸ்ட் ரயில்களை இயக்க வேண்டும். அனைத்து மக்களையும் சுற்றுசூழல் மாசு இல்லாத ரயில் போக்குவரத்து கொண்டு வர வேண்டும் என்பது தான் ஒரு அரசின் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என பயணிகள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
