×

ரூ.616 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தது கலைஞர் ஆட்சி கனிமொழி எம்பி பேச்சு

காரைக்குடி, ஜன. 26: 616 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தது கலைஞர் ஆட்சி, என்று திமுக எம்பி கனிமொழி கூறினார்.
திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி சிவகங்கை மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்ற ‘விடியலை நோக்கி, ஸ்டாலினின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். காரைக்குடி அருகே கல்லலில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசுகையில், ‘‘கல்லல் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் வேண்டும் என முன்னாள் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ தலைமையில் 2 மாதம் முன்பு திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டம் முடிந்தவுடன் இத்தொகுதியை சேர்ந்த அமைச்சர் பாஸ்கரன் ஒருவாரத்தில் பஸ் ஸ்டாண்டுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு விரைவில் பணி துவங்கப்படும் என அறிவித்தார். முதல்வர் பழனிச்சாமி எங்கு சென்றாலும் அடிக்கல் நாட்டி அடிக்கல் நாட்டு நாயகராக உள்ளார். ஆனால் இவர் அதைக்கூட செய்யவில்லை. இதில் இருந்து இந்த ஆட்சி எப்படிப்பட்டது என தெரிந்துகொள்ள முடியும். ஒருஅமைச்சர் அடிக்கல் நாட்டுகிறேன் என அதைக்கூட செய்ய திறமையில்லாத ஆட்சிதான் நடக்கிறது. ஆனால் தலைவர் கலைஞர் ஆட்சியில் இம்மாவட்டத்துக்கு பல நலத்திட்டங்களை செய்துள்ளார். 616 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம், மருத்துவ கல்லூரி, ஒருங்கிணைந்த நீதிமன்றம், மகளிர் கலைக்கல்லூரி, மதுரை-தொண்டி தேசியநெடுஞ்சாலை என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இந்த ஆட்சியை விரைவில் முடிவுக்கு கொண்டு வரக்கூடிய நாள் வந்துவிட்டது.  

தலைவர் கலைஞரின் ஆட்சியை கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைப்பது உறுதி’’ என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஜோன்ஸ் ரூசோ, ஒன்றியக்குழு தலைவர் சொர்ணம்அசோகன், பொதுக்குழு உறுப்பினர் அசோகன், தெய்வானை, மாவட்ட இலக்கிய அணி தலைவர் புலிக்குத்தி சீனிவாசன், அவைத்தலைவர் வடிவேல், மாவட்ட பிரதிநிதிகள் ஜேசுராஜ், பனங்குடி ஜோசப், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பரணிகிட்டு, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் கலாகாசிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kanimozhi MP ,
× RELATED பாஜ, அதிமுக ஸ்டிக்கர் கட்சிகள்...