பஸ் வசதி இல்லாததால் பள்ளிக்கு 3 கிமீ நடக்கும் மாணவிகள் அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?

சிவகங்கை, ஜன.26: சிவகங்கையில் போதிய பஸ் வசதி செய்யப்படாததால் அரசு இல்ல மாணவிகள் மூன்று கிமீ பள்ளியில் இருந்து நடந்து செல்கின்றனர். சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு அருகே அரசினர் குழந்தைகள் இல்லம் உள்ளது. இங்கு ஆதரவற்ற, ஏழ்மை நிலையில் உள்ள பெண் குழந்தைகள் சுமார் 50 பேர் தங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் சிவகங்கை, மேலூர் சாலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து வருகின்றனர். அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கும், மாணவிகள் படிக்கும் பள்ளிக்கும் இடையிலான தூரம் சுமார் மூன்று கி.மீ ஆகும். கொரோனா பாதிப்பால் கடந்த மாதம் முதல் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லாமல் இருந்த நிலையில் தற்போது 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்கின்றனர்.

கொரோனா பாதிப்பிற்கு முன்பு அரசு இல்லத்தில் இருந்து மாணவிகள் காலை பள்ளிக்கு செல்லும் நேரத்தில் ஆயுதப்படை குடியிருப்பு சாலை வழியே பஸ் வந்தது. மாணவிகள் அதில் ஏறி சென்றனர். மாலை நேரத்தில் பள்ளியில் இருந்து அரசு இல்லத்திற்கு வர பஸ் இல்லாத நிலையில் இது குறித்த புகாரின் பேரில் மாவட்ட நிர்வாகம் பஸ் இயக்க நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு மாணவிகள் செல்லவும், மீண்டும் மாலை திரும்பி வரவும் பஸ் வசதி இல்லை. ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த பஸ்கள் இயக்கப்படாததால் மூன்று கி.மீ நடந்து பள்ளி செல்லவும், மீண்டும் 3 கி.மீ நடந்து அரசு இல்லத்திற்கு திரும்பவும் வேண்டிய நிலை உள்ளது. பள்ளியில் இருந்து நகர் பகுதிக்குள் சென்று ரயில்வே சுரங்கப்பாதை வழியே செல்ல வேண்டும்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாணவிகள் செல்லும் வகையில் பஸ் இயக்க வேண்டும் என தொடர்ந்து மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து நிர்வாகத்திற்கு வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆசிரியர்கள் கூறுகையில், பள்ளி முடிந்து நீண்ட தூரம் நடந்து செல்லும்போது அதிகப்படியான சோர்வாகி விடுகின்றனர். உடல் ரீதியிலான பல்வேறு பிரச்னைகளுடன் தினமும் நடந்து செல்வது என்பது கடினமானது. இவ்வாறு நடந்து செல்லும்போது மாணவிகள் பல்வேறு தொல்லைகளுக்கும் ஆளாகின்றனர். உடனடியாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.  

Related Stories:

>