ஆட்டோவில் தவறவிட்ட 10 பவுன் நகை மீட்பு உரியவரிடம் ஒப்படைத்த போலீசார்

திருமங்கலம், ஜன. 26: சென்னை வேளச்சேரி முத்துக்குமார் (42), திருமங்கலத்தை சேர்ந்த உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள, நேற்று முன்தினம் மாலை குடும்பத்துடன் வந்தார். பஸ்நிலையத்தில் இறங்கிய முத்துக்குமார் அங்கிருந்து மறவன்குளம் திருமண மண்டபத்திற்கு ஆட்டோவில் சென்றார். மண்டபத்தில் இறங்கிய முத்துக்குமார் குடும்பத்தினர் 10 நகையுடன் ஆட்டோவில் வைத்திருந்த பேக்கை எடுக்கவில்லை. சிறிதுநேரம் கழித்து பேக்கை தேடிய போது, ஆட்டோவில் எடுக்காதது நினைவுக்கு வந்தது. முத்துக்குமார் புகாரின்பேரில், திருமங்கலம் டவுன் போலீஸ் ஏட்டுகள் ராஜா, கார்த்திக் ஆகியோர் திருமங்கலம் ஆட்டோ ஸ்டாண்டுகளில் விசாரணை நடத்தினர். இதில், பச்சகோபன்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் ஆட்டோவில் முத்துக்குமார் சென்றது தெரிய வந்தது.

அவரை வரவழைத்து போலீசார் ஆட்டோவில் சோதனை செய்தபோது, முத்துக்குமார் வைத்த இடத்திலேயே நகையுடன் பேக் இருந்ததும், டிரைவர் கவனிக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து பேக்கை எடுத்து டிஎஸ்பி விநோதினியிடம் ஒப்படைக்க, அவர் 10 பவுன் நகையுடன் பேக்கை முத்துக்குமாரிடம் ஒப்படைத்தார். ஆட்டோ டிரைவர் ஜெயக்குமாருக்கும் நற்சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. துரிதமாக செயல்பட்ட திருமங்கலம் டவுன் ஏட்டுகள் ராஜா மற்றும் கார்த்திக் ஆகியோரை டிஎஸ்பி பாராட்டினார்.

Related Stories:

>