×

வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்து வாக்களிக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

திண்டுக்கல், ஜன. 26: வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்து வாக்களிக்க வேண்டும் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 11வது தேசிய வாக்காளர் தின விழா திண்டுக்கல் ஜிடிஎன் கலைக்கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி பேசுகையில், இந்திய தேர்தல் ஆணையம் 1950 ஜனவரி 25ம் தேதி தோற்றுவிக்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் தேர்தல்கள், திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் 1000க்கணக்கான அரசு அலுவலர்கள் பல மாதங்களாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வகையான நடவடிக்கைகள் அனைத்தும், பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் நேர்மையாக தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.

இனிவரும் காலங்களில் புதிய வாக்காளர்களாகிய இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலை உறுதி செய்தும், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தினை உணர்ந்தும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற உறுதியை எடுத்து நமது ஜனநாயக கடமையாற்ற வேண்டும். தேசிய வாக்காளர் தினத்தில் முக்கிய குறிக்கோள்களாக சுலபமான பதிவு, சுலபமான திருத்த முறைகள், 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திடவும், மிக முக்கியமாக பிழையில்லா வாக்காளர் பட்டியல் பராமரிப்பது உள்ளிட்டவைகள் நோக்கமாக கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள இணையதள வழிமுறைகளை பயன்படுத்தி வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது விபரங்களை அறிந்து கொள்ளவும், அதில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை திருத்தி கொள்ளவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் தேர்தல் உரிய நடைமுறையை பின்பற்றி இந்திய தேர்தல் ஆணையம் தகுந்த முன்னெச்சரிகை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், வாக்குச்சாவடி மையங்களில் உரிய சமூக இடைவெளி, கிருமிநாசினி, முகக்கவசம் அணிந்து வாக்காளர்கள் வாக்காளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.

தொடர்ந்து கலெக்டர் வாக்காளர் உறுதி மொழியினை வாசிக்க, அதனை அனைவரும் ஏற்று கொண்டனர். பின்னர் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டையினை வழங்கி விட்டு, வாக்காளர் தினவிழா குறித்த கவிதை, பேச்சு, கட்டுரைப, ஓவியம், நாடக போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, துணை ஆட்சியர் (பயிற்சி) விஸ்வநாதன், திண்டுக்கல் கோட்டாட்சியர் உஷா, ஜிடிஎன் கலைக்கல்லூரி முதல்வர் பாலகுருசாமி, திண்டுக்கல் (மேற்கு) வட்டாட்சியர் அபுரிஸ்வான், தேர்தல் வட்டாட்சியர் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...