×

காரமடை, முள்ளி வழித்தடத்தில் கனரக வாகனங்களை இயக்க வலியுறுத்தல்

ஊட்டி,ஜன.26: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் கனரக வாகனங்கள் இயக்க தடை விதித்துள்ளதால் காரமடை, முள்ளி வழித்தடத்தில் லாரிகளை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் பகுதியில் சாலைேயார தடுப்பு சுவர் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், திடீரொன சாலை இடிந்து விழுந்தது. இதனால், இவ்வழித்தடத்தில் லாரி உட்பட கனரக வாகனங்கள் இயக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை தற்காலிகமாக தடை விதித்துள்ளது. அதேசமயம், சாலை சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இதனால், அனைத்து கனரக வாகனங்களும் தறபோது கோத்தகிரி வழித்தடத்தில் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊட்டி மற்றும் குன்னூர் போன்ற பகுதிகளில் உள்ள லாரிகள் கோத்தகிரி வழித்தடங்கள் வருவதால் எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால், மஞ்சூர் பகுதிகளில் உள்ள லாரிகள் பொருட்களை ஏற்றிக் கொண்டு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி வழியாக வருவதால், கால தாமதம் ஏற்படுவது மட்டுமின்றி, எரிப்பொருள் செலவும் அதிகரிக்கிறது. அதேசமயம், மஞ்சூர் பகுதியில் உள்ள லாரிகள் காரமடை, முள்ளி வழியாக எளிதாக மஞ்சூர் வந்தடையலாம். ஆனால், முள்ளி பகுதியில் உள்ள வனத்துறையினர் மற்றும் போலீசார் லாரிகளை இவ்வழித்தடத்தில் அனுமதிக்க முடியாது என தெரிவிப்பதாக தெரிகிறது. இதனால், மஞ்சூர் பகுதிகளில் உள்ள லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த லாரிகள் காய்கறிகளை சமவெளிப் பகுதிகளுக்கு கொண்டுச் செல்லவும், அங்கிருந்து காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் இவ்வழித்தடத்தில் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஞ்சூர் பகுதிகளில் உள்ள லாரி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Karamadai ,Mulli ,