×

கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் பயனாளிகள் தேர்வில் முறைகேடு

மொடக்குறிச்சி, ஜன. 26: ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் 6 வார்டுகள்  உள்ளது. ஒன்றியக்குழு தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த லட்சுமி ராஜேந்திரனும்,  துணைத்தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த பிரீத்தி செந்தில் உள்ளார். கொடுமுடி  ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்  திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஆடு, மாட்டு கொட்டகை அமைப்பதற்கு பயனாளிகள்  தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.2 லட்சத்து 43 ஆயிரம் வழங்கப்படுகிறது.  இந்தாண்டு 74 பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் வட்டார வளர்ச்சி  அலுவலர் உமாதேவி 74 பயனாளிகளையும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்களை மட்டுமே முறைகேடாக தேர்வு  செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கொடுமுடி ஒன்றியக்குழு துணைத்தலைவர்  பிரீத்தி செந்தில் தலைமையில், நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர் உமாதேவியிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆடு, மாட்டு கொட்டகை  பயனாளிகள் 74 பேரும் அ.தி.மு.க.வினரே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை ரத்து  செய்து புதிதாக, அனைத்து கட்சி மற்றும் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பிரீத்தி செந்தில் கூறும்போது, ‘‘74  பயனாளிகளும் அ.தி.மு.க நிர்வாகிகளாக உள்ளனர். தி.மு.க., பொதுமக்கள் மற்றும் பிற  கட்சிகளைச் சேர்ந்த ஒருவர்  கூட இதில் இல்லை. எனவே தி.மு.க. மற்றும் பொதுமக்களை  பயனாளிகளாக தேர்வு செய்ய வேண்டும் என கூறினோம். திங்கட்கிழமைக்குள் மற்ற பயனாளிகளை சேர்த்துக் கொள்வதாக வட்டார வளர்ச்சி அலுவலர்  உறுதியளித்துள்ளார். அவ்வாறு சேர்க்காவிட்டால் பொதுமக்களை திரட்டி  போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றார். மனு வழங்கும்போது, கொடுமுடி  ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்னசாமி, ஒன்றிய அவைத்தலைவர் கந்தசாமி, வழக்கறிஞர்  பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் சிவகுமார், அய்யம்பாளையம் ஊராட்சி தலைவர்  புனிதா ரமேஷ், கொடுமுடி ஹஸன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு