×

பணமோ, பொருளோ முக்கியமல்ல எதிர்காலத்தை சிந்தித்து வாக்களிக்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்

நாகர்கோவில், ஜன.26 : எதிர்காலத்தை சிந்தித்து வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார். 11-வது தேசிய வாக்காளர் தின விழா, நாகர்கோவில் இந்து கல்லூரியில் நேற்று காலை நடைபெற்றது. புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் சேர்ப்பு பணியில் திறம்பட செயல்பட்ட அலுவலர்களுக்கு நற்சான்றிதழ், வாக்காளர் விழிப்புணர்வு தின போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் ஆகியவற்றை வழங்கி கலெக்டர் அரவிந்த் பேசியதாவது: இன்னும் இரு மாதங்களில் தேர்தல் வர போகிறது. குமரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுடன், நாடாளுமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை செல்போனிலேயே சரிபார்த்துக் கொள்ளும் வசதிகள் உள்ளன. National Voters Service Portal என்ற இணையதளத்திலும், Voter Helpline (செயலி) பார்த்து தெரிந்து கொள்ளலாம். உங்களது பெயர், வயது, தந்தையின் பெயர், எந்த சட்டமன்ற தொகுதி, எந்த மாநிலம் என்பதை குறிப்பிட்டு பார்க்கும் போது, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
குமரி மாவட்டத்தில் புதிதாக 54,518 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இன்னும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் இணையதளம் வாயிலாகவும் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.  வாக்குப்பதிவு நாளன்று கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். எந்த ஒரு நிபந்தனைக்கும் உங்களை உட்படுத்திக் கொள்ளாமல் யார் வந்தால் சிறப்பாக இருக்கும் என்பதை சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். பணமோ, பொருளையோ முக்கியமாக கருத கூடாது. எதிர்காலத்தை சிந்தித்து இளம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும். குமரி மாவட்டம் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.  தோவாளை கலைவாணர் கலைக்குழுவினர் நடத்திய தேர்தல் விழிப்புணர்வு தோல்பாவை கூத்தும் நடைபெற்றது. எஸ்.பி. பத்ரி நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா, மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ரிஷாப், நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெண்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் ஆணையர் ஆஷா அஜித் பேசுகையில், வர இருக்கிற தேர்தல் இதற்கு முன் நடந்த தேர்தல்களை காட்டிலும் வித்தியாசமானது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடக்க இருக்கிறது. வாக்களிப்பது மிகவும் பாதுகாப்பானது. உங்கள் ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுக்க கூடாது. கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்கள் அதிகம் பேர் வாக்களிக்க வேண்டும். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றார்.
இளம் வாக்காளர்களின் பங்கு முக்கியம்எஸ்.பி. பத்ரிநாராயணன் பேசுகையில், நமது நாட்டில் 130 கோடி மக்கள் தொகையில் 95 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் 65 சதவீதம் பேர் தான் வாக்களித்துள்ளனர். அதுவும் புதிதாக சேர்க்கப்பட்டு இருந்த ஒன்றரை கோடி பேரில், 30 சதவீதம் பேர் தான் வாக்களித்து இருந்தனர். இளம் தலைமுறையினர் அதிகளவில் வாக்களிக்க வேண்டும். 18 வயதில் சுயமாக நீங்கள் முடிவெடுக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வாக்களிப்பதன் மூலம் வளருகிறது. ஒரு ஓட்டால் என்ன நடக்க போகிறது என நினைத்து வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள் என்றார்

Tags : Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...