கன்னித்திருவிழா கோலாகலம் சிலைகளுடன் கிராம மக்கள் ஊர்வலம்

சிதம்பரம், ஜன. 26:  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் ஒவ்வொரு ஆண்டும் கன்னித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் திருமணமாகாத கன்னிகளை போற்றும் வகையில் இந்த விழா ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளில் கன்னிக்கு படையல் நடத்தும் பொதுமக்கள், கிராமத்தின் ஒவ்வொரு தெருக்களிலும் கன்னி சிலைகளை வைத்து தீபாராதனை காண்பித்து படைப்பர். பின்னர் கன்னி சிலைகளை ஊர்வலமாக தூக்கிச் சென்று ஆற்றில் கரைத்து வழிபடுவர். அப்போது  இளம்பெண்கள் தங்களது விருப்பங்கள் நிறைவேற வேண்டிக் கொள்வர். பல ஆண்டுகளாக பாரம்பரியத்துடன் நடந்து வரும் இந்த கன்னித்திருவிழா சி.முட்லூர் கிராமத்தில் நேற்று நடந்தது.

இதையொட்டி கிராமத்தின் பல்வேறு தெருக்களிலும் இருந்த படைக்கப்பட்ட கன்னி சிலைகளை இளம்பெண்கள், சிறுமிகள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது ஏராளமான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சிறுவர், சிறுமிகள் உள்ளிட்டோர் கன்னி சிலைகளுக்குப் பின்னும், முன்பும் ஆட்டமாடி, பாட்டுப் பாடி, கும்மியடித்து  உற்சாகத்துடன் சென்றனர்.  இளைஞர்கள் சுருள் கத்தி, சிலம்பாட்டம் போன்ற வீர விளையாட்டுகளை விளையாடியபடியே சென்றனர். பெண்கள் கும்மியடித்தும், பாட்டு பாடியும் உடன் சென்றனர்.  இவ்வாறு கிராமத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கன்னி சிலைகள் அனைத்தையும் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று அருகிலுள்ள வெள்ளாற்றில் வைத்து வழிபட்டனர். பின்னர் சிலைகளை தண்ணீரில் கரைத்து விழாவை கொண்டாடி முடித்தனர். இந்த திருவிழாவை யொட்டி சி.முட்லூர் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. கிள்ளை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories:

>