×

ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலையில் நூல் உற்பத்தி 81 சதவீதமாக உயர்வு-கலெக்டர் ஆய்வில் தகவல்

ஊத்தங்கரை : ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலையில் 71.29 சதவீதமாக இருந்த நூல் உற்பத்தி தற்போது 81 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.ஊத்தங்கரையில் இயங்கிவரும் கூட்டுறவு நூற்பாலையின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலையில் கடந்த 19.07.2021 அன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். அதனடிப்படையில் இந்த ஆலையில் உற்பத்தியை அதிகரித்து லாப நோக்குடன் செயல்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை மாதத்தில் 71.29 சதவிகிதமாக இருந்த கூட்டுறவு நூற்பாலையின் உற்பத்தி தற்போது 81 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ₹3 லட்சம் லாபத்துடன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும், நூற்பாலையில் தரமான நூல் உற்பத்தி செய்யவும், நஷ்டத்தில் இருக்கும் ஆலையை தொடர்ந்து லாபத்தில் இயக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நூற்பாலையில் நாள் ஒன்றுக்கு 5,500 கிலோ நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, ஆலையில் 2/40 எஸ்.பாலியஸ்டர்(65:35), கோன் நூல்கள், பள்ளி குழந்தைகளுக்கான விலையில்லா சீருடை திட்டத்திற்கு 40 எஸ், 60 எஸ் கோன் நூல் மற்றும் 40 எஸ் சிட்டா நூல்களும், விலையில்லா வேட்டி -சேலை வழங்கும் திட்டத்திற்கும் அரசு நூல் கிடங்குகள் வாயிலாக நூல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், 20 எஸ், 26 எஸ், 40 எஸ், 60 எஸ், 2/17 எஸ், 2/30 எஸ், 2/40 எஸ், காட்டன் நூல், சிட்டா ரகங்கள் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு நூல் விலை நிர்ணயக்குழு நிர்ணயிக்கும் விலையில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு சிட்டா நூல் கோவை தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஆலையின் மாதாந்திர நூல் விற்பனை மதிப்பு சராசரியாக ₹280 லட்சம் ஆகும். தற்போது நூற்பாலைக்கு புதிய இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு புனரமைக்கப்பட்டதன் மூலமாக ஆலையின் உற்பத்தி திறன் அதிகரித்ததுடன் அரசின் திட்டங்களுக்கு தேவையான நூல் தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்பட்டும், தொழிலாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்கி அவர்களது வாழ்வாதாரம் பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.ஆய்வின்போது கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குநர் வரதராஜன், ஆலை மேலாளர் அமல ரத்னராஜ், உதவி மேலாளர்கள் அய்யனார், முனியாண்டி, நிர்வாக அலுவலர் ராஜரத்தினம், தாசில்தார் தெய்வநாயகி, துணை தாசில்தார்கள் அரவிந்த், சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்குமார், சிவப்பிரகாசம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்….

The post ஊத்தங்கரை கூட்டுறவு நூற்பாலையில் நூல் உற்பத்தி 81 சதவீதமாக உயர்வு-கலெக்டர் ஆய்வில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Uthangarai Co ,Spinning Mill ,Collector ,Uthangarai ,Uthangarai Cooperative Spinning Mill ,
× RELATED கோடை வெயில் முடிந்து மழைக்காலம்...