×

நிவர் புயல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேசிய பேரிடர் மேலாண்மை மத்தியக் குழு ஆய்வு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை மைய மத்தியக் குழுவை சார்ந்த உயர் அலுவலர்கள் தலைமையில் நிவர் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களின் ஆய்வுக்கூட்டம் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, தேசிய பேரிடர் மேலாண்மை மைய மத்தியக் குழு இணை ஆலோசகர் நவல் பிரகாஷ், சார்பு செயலர் பங்கஜ் குமார், மூத்த ஆலோசகர் அனுஜ் திவாரி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் காஞ்சிபுரம் வேகவதி நதியின் ஓரமாக சுகாதாரமின்றி குடியிருக்கும் வீடுகளை அப்புறப்படுத்தி, அவர்களுக்கு பொதுப்பணித்துறையின் மூலம் பயோ மெட்ரிக் கணக்கெடுப்பு நடத்தி தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் கீழ்கதிர்பூர் திட்டப்பகுதியில் ரூ.190.08 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 2,112 குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்திட திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டப் பகுதியில் ஒரு குடியிருப்பிற்கு 300 லிட்டர் கொள்ளளவு என்ற அடிப்படையில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு குடியிருப்பு தலா ரூ.9 இலட்சம் மதிப்பீட்டில் 357.88 சதுர அடியில் கட்டப்பட்டு, சிமெண்ட் தரை மற்றும் நவீன கழிவறை அமைக்கப்பட்டுள்ளன. 5 எண்ணிக்கை மழைநீர் வடிகால்வாய் மற்றும் சேகரிப்பு தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வாலாஜாபாத் வட்டம், நத்தநல்லூர் கிராமத்தில் நிவர் புயலின்போது விவசாயிகளின் பயிர்கள் சேதமானதை பேரிடர் மேலாண்மை மத்தியக் குழு உறுப்பினர்கள் பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். மேலும் காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூர், சோமங்கலம், வரதராஜபுரம் நீர்த்தேக்கத் தொட்டி ஆகிய இடங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நிவர் புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை குறித்து எடுக்கப்பட்ட சீரமைப்பு பணிகளான கரைகளை பலப்படுத்தும் பணிகள், தூர்வாரி சீரமைக்கும் பணிகள் மற்றும் மழைக்காலங்களில் நீர் வெளியேறிட தேவையான பணிகளை தேசிய பேரிடர் மேலாண்மை மைய மத்தியக் குழுவை சார்ந்த உயர் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ)மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Nivar Storm ,Monsoon Precautionary Measures National Disaster Management Central Committee Study ,
× RELATED நிவர் புயல், பருவமழை முன்னெச்சரிக்கை...