போலி அறக்கட்டளையை நம்பி குவிந்த மாற்றுத்திறனாளிகள்

* குடியாத்தத்தில் திடீர் சாலை மறியலால் பரபரப்பு

* பல மாவட்டங்களில் ₹25 லட்சத்துக்கு மேல் வசூல் ‘மாற்றுத்திறனாளிகளின் முதல் மாநில மாநாடு’ என நோட்டீஸ்

குடியாத்தம், ஜன. 24: குடியாத்தத்தில் ‘மாற்றுத்திறனாளிகளின் முதல் மாநில மாநாடு’ என நோட்டீஸ் அச்சடித்து 5 மாவட்டங்களில் ₹25 லட்சம் வசூலித்து மோசடி செய்த, போலி அறக்கட்டளையை நம்பி வந்த மாற்றுத்திறனாளிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அம்மணாங்குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அறக்கட்டளை ஒன்றின் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற உள்ளதாக பேனர், போஸ்டர், நோட்டீஸ் அச்சடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளி சங்கங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் இலவச சைக்கிள், 3 சக்கர பைக் உட்பட உபகரணங்கள் வழங்குவதாகவும், 2000 நபர்களுக்கு உணவு, ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உடை மற்றும் செயற்கை கை, கால்கள் பொருத்தப்படும் என்றும், விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவதாகவும் நோட்டீசில் அறிவித்துள்ளனர்.

அதன்படி நேற்று காலை வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் குடியாத்தத்தில் மாநாடு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்தில் திரண்டனர். ஆனால் நீண்ட நேரம் காத்திருந்தும் அறக்கட்டளை நிர்வாகிகள் யாரும் வரவில்லை. இதனால் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு சில மாற்றுத்திறனாளிகள் குடியாத்தம்- வேலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டு கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த வேலூர் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் ராமு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டுறவு சங்கம் மற்றும் கூட்டுறவு வங்கிகள், மூலம் வட்டி இல்லாமல் கடன் வழங்குவதாக கூறினார். அதோடு, மாற்றுத்திறனாளிகள் மீண்டும் வீடு திரும்ப போக்குவரத்து செலவு மற்றும் உணவு ஏற்பாடு செய்து கொடுத்தார். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் வத்சலா மற்றும் வருவாய் துறையினர் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்று, அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சாலை மறியலால் குடியாத்தம்- வேலூர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதற்கிடையில் அங்கு வந்து விசாரணை நடத்திய குடியாத்தம் டவுன் போலீசாரிடம், மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், தனிப்பிரிவு தலைமை காவலர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அறக்கட்டளை நிர்வாகிகளான குடியாத்தத்தை சேர்ந்த நந்தகுமார், ராணிப்பேட்டையை சேர்ந்த நாகராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அறக்கட்டளை போலியானது என்பதும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உட்பட பல்வேறு மாவட்டங்களில் ₹25 லட்சத்துக்கு மேல் நிர்வாகத்தினர் வசூலித்து மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கலெக்டர் வருகை ரத்து

குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் மாநில மாநாட்டில் வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று கலெக்டர் நிகழ்ச்சிக்கு வரவில்லை. அறக்கட்டளை போலியானது என்பதை முன்கூட்டியே அறிந்து கலெக்டர் சண்முகசுந்தரம் வருகையை ரத்து செய்து கொண்டார்.

Related Stories:

>