பாலம் கட்டும் பணி காரணமாக தலைகுந்தாவில் மாற்றுப்பாதை அமைப்பு

ஊட்டி, ஜன. 24:  தலைகுந்தாவில் பாலம் கட்டும் பணி துவக்கப்படவுள்ளதால், மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. ஊட்டியில்  இருந்து கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது பல்வேறு பகுதிகளிலும் சாலை  விரிவாக்கம், சீரமைப்பு மற்றும் பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. தலைகுந்தா பகுதியில் பழமை வாய்ந்த பாலம் ஒன்று உள்ளது. காமராஜ்  சாகர் அணைக்கு தண்ணீர் செல்லும் நீரோடை மீது இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. சேறும் சகதியும் நிறைந்த நிலையில் தற்போது மழை பெய்தால், பாலத்திற்கு மேல்  தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு  ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், தலைகுந்தா பகுதியில் உள்ள  பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டும் பணிகள்  துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, தற்போது உள்ள பாலத்தின் அருகே தற்காலிக பாலம்  மற்றும் சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் ஓரிரு  நாட்களில் முடிந்தவுடன், அனைத்து வாகனங்களும் தற்காலிக பாலத்தின் வழியாக  திருப்பிவிடப்படவுள்ளது. அதன்பின், பழைய பாலம் இடிக்கப்பட்டு, அதே  பகுதியில் 5 அடி உயரத்தில் புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெறும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>