×

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு

சென்னை:அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஓய்வூதிய அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை : தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்குவது குறித்து தகுந்த பரிந்துரைகள் வழங்க, அரசு கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவும் பரிந்துரை அறிக்கையை அளித்தது. அதை முழுமையாக ஆராய்ந்து, தமிழக அரசு தற்போது சந்தித்து வரும் நெருக்கடியான நிதிச்சூழலில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ‘தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டம்’ என்ற புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

இந்தத் திட்டத்தை அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களும் வரவேற்றுள்ளன. “20 ஆண்டு காலம் ஓய்வூதியம் இல்லாத நிலைமைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பணிக் கொடை ரூ.25 லட்சம், அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க உறுதியளிக்கப்பட்டு இருக்கிறது. குறைந்தபட்ச ஓய்வூதியம், கருணை அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது”

என்று ஜாக்டோ-ஜியோ, தலைமைச் செயலக சங்கம், அரசு ஊழியர் சங்கம், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் உட்பட பல்வேறு அரசு ஊழியர் -ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்து முதல்வரையும் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு இயந்திரம் சிறப்பாக இயங்குவதற்கு ஆக்கமும் ஊக்கமும் தரும் வகையில் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vaiko ,Chief Minister ,MK Stalin ,Chennai ,MDMK ,General Secretary ,Tamil Nadu government ,
× RELATED பயண அட்டை தொலைந்துபோனால் இருப்பு...