- புதுச்சேரி
- உள்ளக அமைச்சகம்
- உள்துறை அமைச்சகம்
- சார்பு செயலாளர்
- ராகேஷ் குமார் சிங்
- இந்தியா
- பத்மா ஜெய்ஸ்வால்
- ஐஏஎஸ்
- தில்லி
புதுச்சேரி: இந்தியா முழுவதும் 49 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை அமைச்சகத்தின் சார்பு செயலர் ராகேஷ்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார். அதன்படி புதுச்சேரியில் நீண்டகாலமாக ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த பத்மா ஜெய்ஷ்வால் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக டெல்லியில் பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி கின்னி சிங், புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளார். புதுச்சேரி காவல்துறையில் ஐஜியாக பணியாற்றி வந்த அஜித்குமார் சிங்லா, டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இவரை தொடர்ந்து சீனியர் போலீஸ் எஸ்பியாக பணியாற்றிய ஈஷாசிங் டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ரஜீந்தர்குமார் குப்தா புதுச்சேரிக்கு காவல்துறை பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
2024 முதல் புதுச்சேரியில் சீனியர் எஸ்பி பொறுப்பை வகித்த ஈஷாசிங், செயல்திறன் மற்றும் நேர்மை காரணமாக மாநிலத்தில் பெருமளவு கவனம் பெற்றவர். 2021 ஐபிஎஸ் பேட்ச் ஈஷா சிங், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். புதுச்சேரியில் பணியாற்றிய காலத்தில் பல்வேறு சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளில் முன்னெடுப்புடன் செயல்பட்டு, பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். சமீபத்தில் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டார். அந்தநிகழ்ச்சியில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிபந்தனைகளை மீறி ரசிகர்களை உள்ளே வர சொல்லியதால், உங்களால்தான் 40 பேர் உயிர் போயிருக்கிறது. எங்களுக்கு நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம் என கடுமையாக கடிந்து கொண்டார் ஈஷா சிங். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, பாஜவை சேர்ந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஈஷா சிங்கை நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிலையில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
