முதல்கட்டமாக 4 ஆயிரம் பேருக்கு ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டை

கோவை, ஜன. 24: கோவையில் முதல் கட்டமாக 4 ஆயிரம் பேருக்கு ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நலத்திட்ட உதவிகளை எளிதாக பெறும் வகையில் தேசிய அளவில் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்க மத்திய அரசு கடந்தாண்டு அறிவித்தது. இந்த அடையாள அட்டை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான ஆதாரம், பாதிக்கப்பட்ட விவரம், ஆதார் எண், செல்லிடப்பேசி எண், புகைப்படம் ஆகிய அவணங்களை இணைத்து இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. அதன்படி கோவையில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் முதல்கட்டமாக 4 ஆயிரம் பயனாளிகளுக்கு ஒருங்கிணைந்த அடையாள அட்டை வழங்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப நலத்திட்டங்களை செயல்படுத்தவும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் நலத்திட்ட உதவிகளை பெறும் விதமாகவும் தேசிய அளவில் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. கோவை மாவட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இந்த அட்டை பெறுவதற்கு இதுவரை 10 ஆயிரம் மட்டுமே இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.இவர்களில் 4 ஆயிரம் பேருக்கு தேசிய அளவிலான ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அச்சிடப்பட்டு பெறப்பட்டுள்ளது. இதனை மாற்றுத்திறனாளிகளுக்கு விநியோகிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து விண்ணப்பித்துள்ள அனைத்து பயனாளிகளுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Related Stories:

>