×

திமுக முன்னாள் எம்பி எல்.கணேசன் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

 

தஞ்சாவூர்: தஞ்சையில் நேற்று காலை முன்னாள் எம்பி எல்.கணேசன் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். திமுக முன்னாள் எம்பி எல்.கணேசன் (92) நேற்று காலை மரணம் அடைந்தார். இவர், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி கீழையூரில் 1934 ஏப்ரல் 24ம்தேதி பிறந்தார். சட்ட கல்லூரியில் படிக்கும்போது தன்னை திமுகவில் இணைத்து ெகாண்டார். மிசா சட்டத்தில் சிறைவாசம் அனுபவித்தார். 1965ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் தலைவராக எல்.கணேசன் இருந்துள்ளார். எல்.ஜி. என அரசியல் வட்டாரத்தில் அறியப்பட்ட இவர், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞருடன் நெருங்கிய நட்புறவில் இருந்து அவர்களின் நன்மதிப்பை பெற்றவர். திமுக நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றவர். 1971ல் திமுக மாநில மாணவர் அணி செயலாளராக பணியாற்றினார்.

1971 , 1989 ஆகிய ஆண்டுகளில் 2முறை ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருமுறை சட்டமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 1980-86ல் ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்தார். 1994ல் திமுகவில் இருந்து பிரிந்து மதிமுக உருவானபோது, அதன் அவைத் தலைவராக பதவி வகித்தார். 2004-2009 திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக வாக்களித்ததால் மதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து எல்.கணேசன் ஒதுங்கியிருந்தார். நேற்று காலை தஞ்சை பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை தனி விமான மூலம் தஞ்சை விமானப்படை விமான நிலையத்திற்கு வந்திறங்கினார். பின்னர் கார் மூலம் பாலாஜி நகரில் உள்ள எல்.கணேசன் இல்லத்திற்கு 5.30 மணியளவில் சென்று அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 15 நிமிடம் அங்கிருந்து முதல்வர், 5.45மணிக்கு புறப்பட்டு தஞ்சை விமானப்படை விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். முதல்வரை தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, கோவி.செழியன், ரகுபதி, அன்பில் மகேஷ், எம்பிக்கள் டி.ஆர்.பாலு, முரசொலி, எம்எல்ஏக்கள் துரை.

சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சும் பூபதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் எல்.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மறைந்த எல்.கணேசனின் மனைவி கமலா. இவரது மகன் எல்.ஜி.அண்ணா, தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக பொருளாளராக பதவி வகித்து வருகிறார். இளைய மகன் கோவிந்தநாதனும், மகள் மாதவியும் டாக்டர்கள்.
எல்.கணேசன் உடல் இன்று (5ம்தேதி) காலை 9 மணிக்கு அவரது சொந்த ஊரான கண்ணந்தங்குடி கீழையூரில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

 

Tags : Former ,DMK ,L.Ganeshan ,Chief Minister ,M.K.Stalin ,Thanjavur ,MP L.Ganeshan ,Thanjavur… ,
× RELATED மேட்டூர் அணையின் நீர் மட்டம் 442...