×

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி: புதுக்கோட்டையில் அமித்ஷா மீண்டும் உறுதி

 

புதுக்கோட்டை: தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி என்று புதுக்கோட்டையில் அமித்ஷா மீண்டும் உறுதியாக தெரிவித்ததால் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பாலன்நகர் அடுத்த பள்ளத்திவயலில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா, அந்தமான் தலைநகர் போர்ட்பிளேர் விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் நேற்று மதியம் 3 மணியளவில் திருச்சிக்கு வந்தார். அவருடன் ஒன்றிய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வந்தார். அவர்களை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

தொடர்ந்து, அமித்ஷா அங்கிருந்து காரில் புறப்பட்டு திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார். பின்னர் மாலை 5 மணிக்கு திருச்சியில் இருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக புதுக்கோட்டை சென்றார். அங்கு நயினார் பிரசார நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:
இங்கே மாபெரும் சோழ சாம்ராஜ்யம் ஆண்ட பூமியில் உரையை துவக்குகிறேன். மாபெரும் அவையின் வாயிலாக தமிழக மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறேன். வாருங்கள், பிரதமர் மோடியின் தலைமையில் அணிவகுப்போம். பாரதத்தின் வளர்ச்சி பயணத்தில் பங்கு பெறுவோம். இந்த யாத்திரையின் மூலம் அனைத்து மக்களிடமும் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் பாஜவும், அதிமுகவும் இன்னும் பிற கூட்டணி கட்சிகளும் வலுவான கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க போகிறோம். ஏப்ரல் மாதத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும். 1998, 2019, 2021ம் ஆண்டுகளில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம். 2024ம் ஆண்டு தனியாக போட்டியிட்டோம். ஆனால் அதிமுகவும், நம்முடன் கூட்டணியில் இருந்திருந்தால் அப்போது 20 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம்.

மொழியை வளர்க்க பாஜக முயற்சி செய்து வருகிறது. ரயில் நிலையத்தில் தமிழ் அறிவிப்பை மோடி தான் கொண்டு வந்தார். வாரணாசி பல்கலைக்கழகத்தில் பாரதியாருக்கு தமிழ் இருக்கையை மோடிதான் அமைத்தார். போட்டித் தேர்வுகளை தமிழில் எழுதவும் மோடிதான் வாய்ப்பளித்தார். அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்து அழகு பார்த்தவர் மோடி. தமிழரை துணைக் குடியரசுத் தலைவராக அமர்த்தியவர் மோடி. 2026ல் தமிழகம், மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கம், தமிழகத்தில் என்டிஏ ஆட்சியை அமைக்க வேண்டும். இதற்கு நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா தொடர்ந்து பேசி வந்ததற்கு, எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தலைவர்கள் கூட்டணி ஆட்சிக்கே வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இருந்தும், மீண்டும் கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா பேசியிருப்பது எடப்படி மற்றும் அதிமுக தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : NDA ,Tamil Nadu ,Amit Shah ,Pudukkottai ,Edappadi Palaniswami ,AIADMK ,BJP ,Nayinar Nagendran ,Tamil Nadu government ,Pallathivayal ,Thirukokarnam ,Palannagar ,Pudukkottai… ,
× RELATED மேட்டூர் அணையின் நீர் மட்டம் 442...