×

தமிழகம் மின் மிகை மாநிலமாக இருக்கிறது

கோவை, ஜன.24: கோவை மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று குனியமுத்தூர் பஸ் ஸ்டாப் பகுதியில் அவர் பேசியதாவது: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கடந்த 4 ஆண்டாக அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடக்கிறது. இந்த ஆட்சியில் சாதி, மத, இன சண்டை கிடையாது. அமைதியாக, மக்களுக்கு பாதுகாப்பான ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் அமைதிப்பூங்காவாக இருக்கிறது. சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இந்த அரசு இருக்கிறது. தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்ட போதிலும் தட்டுபாடின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னையில் ரயில் மூலமாக குடிநீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை மாவட்டத்தில் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. உள்ளாட்சி துறையில் 100க்கும் மேற்பட்ட விருதுகள் பெறப்பட்டுள்ளது’’ என்றார்.

சுந்தராபுரம் பஸ் ஸ்டாப் பகுதியில் அவர் பேசுகையில், ‘‘கோவை மாவட்டத்தில் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்களின் மூலமாக 5 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து பெறப்படுகிறது. 42 கோடி ரூபாய் செலவில் தானியங்கி பால் பதப்படுத்தும் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.  307 கோடி ரூபாய் செலவில் அண்ணா நகர், மலை நகர், வெள்ளலூர், மலுமிச்சம்பட்டி, கோவைப்புதூர், திருவிக நகர் உள்ளிட்ட பகுதிகளில் 6,328 அடுக்குமாடி வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது.
18 கோடி ரூபாய் செலவில் ஈச்சனாரி மேம்பாலம், 35 கோடி ரூபாய் செலவில் போத்தனூர் ரயில்வே கடவு மேம்பாலம், 500 கோடி ரூபாய் செலவில் பொள்ளாச்சி மெயின் ரோடு பணிகள் நடத்தப்பட்டது. 6.5 கோடி ரூபாய் செலவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம். 2.25 கோடி ரூபாய் செலவில் தாசில்தார் அலுவலகம் கட்டப்பட்டது. 11.15 கோடி ரூபாய் செலவில் 24 ரோடு பணிகள் நடக்கிறது. கோவை அமைதி பூங்காவாக இருக்கிறது.

2019ம் ஆண்டில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக 3.05 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடு பெறப்பட்டுள்ளது. இதன் மூலமாக 10.5 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. கல்வி துறையில் அதிக நிதி  ஒதுக்கப்பட்டது. பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டது. மின் தடை இல்லாமல் மின் மிகை மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இந்தியாவில்  தொழில் செய்ய உகந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது. கொரோனா நோய் பரவல்  காலங்களில் மாதம் ஆயிரம் ரூபாயும், அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை ரேஷன்  கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டது. தற்போது பொங்கல் பரிசாக 2,500 ரூபாய்  வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.மதுக்கரை மார்க்கெட்டில் முதல்வர் பேசுகையில், ‘‘எம்.ஜி.ஆர் மதுக்கரையில் உள்ள சினிமா தியேட்டரில் அந்த காலத்தில் நாடகம் நடத்தினார். பின்னர் அவர் மதுக்கரையில் மலைக்கள்ளன் சினிமா படத்தில் கலந்து கொண்டு நடித்தார். எம்.ஜி.ஆர். முதல்வரான பின்னர் கடந்த 1983ம் ஆண்டில் மதுக்கரை புதிய பாலம் கட்டி திறக்கப்பட்டது. இதில் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டார். மதுக்கரை எம்.ஜி.ஆர் வாழ்ந்த புண்ணிய பூமி’’ என்றார்.

Tags : Tamil Nadu ,power surplus state ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...