நாகர்கோவிலில் பறக்கை கால்வாய் கரையில் வீடுகள் இடித்து தரைமட்டம் கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

நாகர்கோவில், ஜன.24 :  நாகர்கோவில் பறக்கை கால்வாய் கரையில் இருந்த வீடுகளை இடித்து அகற்றும் பணிகள் நேற்று தொடங்கியது. கோயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சர் தலைமையில் பா.ஜ.வினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். நாகர்கோவில் அருகே பழையாற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையான சபரி அணையில் இருந்து, பறக்கை குளத்துக்கு தண்ணீர் செல்லும் வகையில் பறக்கை பாசன கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் சுமார் 6.400 கி.மீ. ஆகும். பல இடங்களில் இந்த கால்வாய் ஆக்ரமிக்கப்பட்டு வீடுகளாகவும், கட்டிடங்களாகவும் மாறி உள்ளன. மேலும் கால்வாயில் கழிவு நீர் கலந்து சாக்கடையாகவும் ஒரு பகுதி மாறி விட்டது.

இந்த கால்வாய் ஆக்ரமிப்புகளை அகற்றி, சுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இந்த கால்வாய் தொடங்கும் பகுதியிலேயே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தில் ஏராளமானவர்கள் வீடுகள் கட்டி கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறார்கள். பறக்கிங்கால் பகுதி என அழைக்கப்படும் இந்த பகுதியில் உள்ள சுமார் 316 வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை நோட்டீஸ் வழங்கியது. இங்கு குடியிருந்து வருபவர்களுக்கு, அஞ்சுகிராமம் அருகே பால்குளம் பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு சொந்தமான வீடுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் பணம் கட்ட  முடியாமல் பலர் அங்கு செல்ல  வில்லை. இந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன், வீடுகளை இடித்து அகற்ற பொதுப்பணித்துறையினர் வந்தனர். ஆனால் பலர் எங்களுக்கு போதிய அவகாசம் வேண்டும் என கூறி ஆக்ரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஜன.21ம் தேதி வரை அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. காலஅவகாசம் முடிந்ததை தொடர்ந்து நேற்று (23ம்ேததி) காலை வீடுகளை இடித்து அகற்றும் பணிகள் தொடங்கின. ஏற்கனவே 16 வீடுகள் இடிக்கப்பட்டு இருந்த நிலையில் மீதமுள்ள 300 வீடுகளை இடித்து அகற்றுவதற்கான பணிகள் நடந்தன. தாசில்தார் சுசீலா மற்றும் வருவாய் அலுவலர்கள் வந்து இருந்தனர். கோட்டார் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த பகுதியில் மதுரை வீரன் கருப்பசாமி கோயில் உள்ளது. இந்த கோயிலை இடிக்கக்கூடாது என கூறி அப்பகுதி பொதுமக்கள் கோயிலுக்குள் சென்று அமர்ந்தனர். தகவல் அறிந்ததும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பா.ஜ. செயற்குழு உறுப்பினர் எம்.ஆர். காந்தி, மாவட்ட பொருளாளர் முத்துராமன் உட்பட நிர்வாகிகள் திரண்டனர். அவர்களும் ேகாயிலுக்குள் சென்று அமர்ந்திருந்தனர். இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

வழிபாட்டு தலங்களை அகற்ற கூடாது. இந்த கோயிலை வைத்து தான், இனி இங்கு குடியிருந்த 300 குடும்பங்களும் ஒன்று சேர வேண்டும். எனவே கோயிலை இடித்து அகற்ற கூடாது என்றனர். தாசில்தார் சுசீலா தலைமையில் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். கோயிலை இடிக்க மாட்டோம் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்தனர். காலை முதல் மாலை வரை வீடுகளை இடிக்கும் பணிகள் நடந்தன. இன்று 2 வது நாளாகவும் வீடுகளை இடிக்கும் பணிகள் நடக்கிறது.

பாரபட்சம் காட்டாமல் இடிக்கப்படுமா?

பா.ஜ.வினர் கூறுகையில், பறக்கிங்கால் பகுதியில் குடியிருந்த மக்கள் அனைவரும் அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள் ஆவர். இதனால் ஆக்ரமிப்பு அகற்றம் என்ற பெயரில் அவர்களின் வீடுகளை இடித்து தரை மட்டமாக்கி விட்டனர். இந்த கால்வாய் கரையில் கோட்டார், இடலாக்குடி பகுதிகளில் எல்லாம் பணக்காரர்கள், அரசியல் பலம் உள்ளவர்கள் வீடுகளையும், கட்டிடங்களையும் கட்டி உள்ளனர். ஆக்ரமிப்பு அகற்றும் போது, பாரபட்சம் இல்லாமல் முழுமையாக இடித்து அகற்ற வேண்டும் என்றனர்.

Related Stories:

>