×

தந்தை, மகனை குறிவைத்து அடித்து உதைத்தனர் கொச்சி துறைமுகத்தில் குமரி மீனவர்கள் மீது தாக்குதல் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

நாகர்கோவில், ஜன.24:  குமரி மாவட்டம் தூத்தூர் மீனவர்கள் மீது கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்ட மீனவர்கள் ஏராளமானோர் கேரளாவில் தங்கி, அங்குள்ள துறைமுகங்களில் இருந்து ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். தூத்தூர், குளச்சல்  மண்டல பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பெரும்பாலும் இவ்வாறு மீன் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.  தூத்தூர் பகுதியைச் சேர்ந்த பென்சிகர் என்பவருக்கு சொந்தமான ‘மேரி மாதா’ என்ற விசைப்படகில் தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் கேரள மாநிலம் கொச்சி அருகே தொப்பும்படி மீன்பிடித் துறைமுக கடல் பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்து விட்டு  துறைமுகத்தை வந்தடைந்தனர். அப்போது குமரி  மீனவர்களின்  விசைப்படகில் கேரளாவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் திடீரென அத்துமீறி நுழைந்தனர்.  அவர்கள் தூத்தூர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் சுர்ளிங் என்ற மீனவரை அவர்கள் கடுமையாக தாக்கியபோது அவரது மகன் சஜின் என்பவர் தடுக்க முயன்றார். உடனே கும்பல் இருவரையும் சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலை பிற மீனவர்கள் கூடிநின்று வேடிக்கை பார்த்தார்களே தவிர குமரி மாவட்ட மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க யாரும் முயற்சிக்கவில்லை. இதில்  படுகாயமடைந்த இருவரும் அந்த பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மீனவர்கள் மோதலுக்கு காரணம் என்ன? என்று கேள்வி எழுந்துள்ளது. குறிப்பிட்ட இருவரை மட்டுமே அவர்கள் தாக்கியதால் ஏதேனும் தனிப்பட்ட விரோதம் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து கேரள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் இரு மாநில மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பு மீனவர்களையும் அழைத்து பேசி பிரச்னைக்கு சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : fishermen ,Kumari ,Kochi ,port ,
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...