×

நள்ளிரவில் போலீஸ் நடத்திய சேசிங் நாகர்கோவிலில் இருந்து காரை கடத்திய வாலிபர் சோதனை சாவடிகளை இடித்து தள்ளி தப்பினார்

அஞ்சுகிராமம், ஜன.24 : நாகர்கோவில் வடசேரியில் இருந்து காரை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். நாகர்கோவில் வடசேரி வணிகர் தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (45). கார் டிரைவர். நேற்று முன்தினம் எர்ணாகுளத்துக்கு சவாரிக்கு சென்று விட்டு, இரவில் நாகர்கோவில் வந்தார். சாப்பாடு வாங்குவதற்காக வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள ஒரு காம்பளக்ஸ் எதிரே காரை நிறுத்தி விட்டு, ஓட்டலுக்கு சாப்பாடு வாங்க சென்றார். கார் சாவியை அருணாசலம் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அங்கு நின்ற வாலிபர் ஒருவர், இதை பயன்படுத்திக் கொண்டு காரை வேகமாக எடுத்து சென்றார். இதை கவனித்த அருணாசலம் திருடன், திருடன் என கூச்சலிட்டார். ஆனால் காரை அந்த வாலிபர் மின்னல் வேகத்தில் ஓட்டி சென்றார். இது குறித்து  வடசேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர். காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் ரோந்து பணியில் இருந்த அனைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆங்காங்கே போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

திருநெல்வேலி, கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் சோதனை சாவடி போலீசாரும் உஷார்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர். கடத்தப்பட்ட கார், கன்னியாகுமரி - சுசீந்திரம் தேசிய நெடுஞ்சாலையில் மயிலாடி வழியாக சென்றதை பார்த்து சுசீந்திரம் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மடக்க முயன்றனர். ஆனால் கார் வேகமாக சென்றது. இதனால் போலீசார் காரை வேகமாக துரத்தினர். சைரன் ஒலித்தவாறு போலீசார் வேகமாக காரை பின் தொடர்ந்து சென்ற சம்பவம் சினிமாவில் காட்டப்படுவது போல் இருந்தது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

 இது பற்றிய தகவல் வந்ததும் மயிலாடி - அஞ்சுகிராமம் ரோட்டில் செக்போஸ்ட்டில் பணியிலிருந்த போலீசார், துரிதமாக செயல்பட்டு பேரிகார்டுகளை வைத்து சாலையை அடைத்தனர். ஆனால் வேகமாக வந்த கார் பேரிகார்டுகளை இடித்து தள்ளிவிட்டு வேகமாக கடந்தது. அந்த சமயத்தில் காரை மறிக்க முயன்ற 2 போலீசார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அந்தப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. நிற்காமல் சென்ற காரை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் ரோந்து பணியில் இருந்த போலீசார் தொடர்ந்து துரத்தினர். பணகுடி அருகே சென்று கொண்டு இருந்த போது திடீரென கார் பஞ்சராகி உள்ளது. இதையடுத்து காரை நிறுத்தி விட்டு, அதை கடத்திய வாலிபர் தப்பினார். கார் அநாதையாக நின்றது. பின்னால் துரத்தி சென்ற போலீசார் காரை மீட்டு, வடசேரி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். காரை கடத்தி சென்ற வாலிபர் யார்? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. நாகர்கோவில் - அஞ்சுகிராமம் சாலையில் நடந்த இந்த சேசிங் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு