×

காவலர்கள், தீயணைப்பு அலுவலர்கள் 750 பேருக்கு பணி நியமன ஆணை போதை பொருட்கள் விற்பனையில் சமரசம் கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் காவல்துறை சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 621 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 129 தீயணைப்பு துறை நிலைய அலுவலர்கள் என மொத்தம் 750 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: ஒரு காவலர் நல்லது செய்கின்ற செய்தி மீடியாக்களில் வரும்போது, ஒட்டுமொத்தமாக அந்த துறைக்கே பெருமையை தேடி தருகிறது. எடுத்துக்காட்டுக்கு ஒன்று சொல்கிறேன், கடந்த ஆண்டு ராஜேஸ்வரி என்கிற ஒரு பெண் காவலர், பெருமழை பேரிடர் காலத்தில், காயமடைந்து, சுயநினைவில்லாமல் இருந்த ஒருவரை தன்னுடைய தோள்களில் சுமந்து கொண்டு சென்று காப்பாற்றினார். அவரை நான் வீட்டிற்கே நேரில் அழைத்து பாராட்டினேன். ஏன் சொல்கிறேன் என்றால், காவலர் பணி மனிதநேயத்துடன் இணைந்தது. வீரத்தின் அடித்தளம் எது தெரியுமா? அன்புதான்.

அதேபோல, மற்றொரு பக்கம், எங்கேயோ ஒரு காவலர் தவறு செய்தாலும், ஒட்டுமொத்த துறை மீதும் மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையை அது பாதிக்கும். அதை உணர்ந்து நீங்கள் ஒவ்வொருவரும் கவனமாக செயல்பட வேண்டும்.
காவலர் என்றால் மக்களுக்கு காட்சிக்கு எளியவர்களாக, கனிவாக நடந்து கொள்ள வேண்டும். உங்களுடைய உறுதி, செய்கின்ற வேலையில் தெரிய வேண்டும். இரும்புக்கரத்தை குற்றத்தை தடுப்பதில் பயன்படுத்துங்கள். புகார் வருபவர்களிடம் மரியாதை, புன்னகை, அக்கறை கலந்த கேரக்டராக காட்டுங்கள். குறிப்பாக, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும்போது, மிக மிக ஜாக்கிரதையாக கையாள வேண்டும். சென்சிபிளாக நடந்து கொள்ள வேண்டும். இந்த துறைக்கு பொறுப்பு வகிக்கின்ற முதலமைச்சராக இது என்னுடைய கோரிக்கை மட்டுமல்ல; 100 சதவிகிதம் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய உத்தரவு.

அதேபோல, போதை பொருட்கள் நடமாட்டம், விற்பனையை தடுப்பதிலும் ‘ஜீரோ டாலரென்ஸ்’ என்கிற பாலிசியை நீங்கள் பயன்படுத்த வேண்டும். உங்கள் எல்லோருடைய வீட்டிலும் குழந்தைகள் இருப்பார்கள். யார் பாதிக்கப்பட்டாலும், போதை எனும் ஆபத்து நாளை நம்முடைய வீட்டு குழந்தைகளையும் பாதிக்கும் என்று உணர்ந்து, பர்சனல் இன்வால்வ்மெண்டுடன் நீங்கள் செயல்பட வேண்டும். “நான் இன்சார்ஜாக இருக்கின்ற பகுதியில், என்னை மீறி ஒரு குற்றச்சம்பவம் நடக்க விடமாட்டேன்” என்று நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள்ளே ஒரு ‘ரெசல்யூஷன்’ எடுத்துக்கொள்ள வேண்டும். என்னடா, வந்ததில் இருந்து மக்கள் நலனுக்காக மட்டும் சொல்கிறாரே, நம்முடைய நலனுக்கு எதுவும் இல்லையா என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது. மக்களை காக்கின்ற உங்களுக்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம்.

அதில் சிலவற்றை மட்டும் நான் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணமான காவலர்களான நீங்கள், உங்கள் பேமிலியுடன் டைம் ஸ்பெண்ட் செய்யவேண்டும் என்பதற்காக, வாரம் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படுகின்றது. காவலர்களுக்கு வழங்கப்படும் காப்பீட்டுத்தொகை இருமடங்காக வழங்கப்பட்டு வருகிறது. இரவு பகல் பார்க்காமல், பண்டிகை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் கூட நீங்கள் பொறுப்பாக டியூட்டி பார்க்கின்ற நம்பிக்கையில்தான், முதலமைச்சரான நான் தொடங்கி, மாநிலத்தின் கடைக்கோடியில் வசிக்கின்ற சிட்டிசன் வரை அனைவருமே எங்கள் பணிகளை மேற்கொள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. மாநிலத்தின் அமைதியை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும். சட்டம்- ஒழுங்கை சமரசமில்லாமல் நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, நிறைவாக, உங்களுக்கு ஒரு பர்சனல் அட்வைஸ் சொல்ல விரும்புகிறேன்.

போலீஸ் வேலையில் இருக்கின்ற நீங்கள் தொடர்ந்து உங்கள் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிட்னெஸ் மிகவும் முக்கியம். அதற்கேற்ற உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யுங்கள். அதுமட்டுமல்ல, ஏதாவதொரு ஸ்போர்ட்ஸ்-ல் பங்கெடுத்து விளையாடுங்கள். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, எம்எல்ஏ தாயகம் கவி, துணை மேயர் மகேஷ் குமார், தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ்குமார், காவல்துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) வெங்கடராமன், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் சீமா அகர்வால், காவல்துறை இயக்குநர்கள், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட காவல்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Anna Centenary Library Hall ,Kotturpuram, Chennai ,Tamil Nadu Uniformed Services Selection Board… ,
× RELATED என்னுடைய படம் கூடதான் 4 வருஷமா...