புரோக்கரை கடத்தி கத்தியால் குத்தி நகை பறிப்பு எல்லையோர கிராமங்களில் தனிப்படைகள் விசாரணை பணகுடி போலீஸ் வழக்குப்பதிவு

நாகர்கோவில், ஜன.24 : திருமண புரோக்கரை காரில் கடத்தி நகைகள் பறித்த சம்பவத்தில், குமரி, நெல்லை எல்ைலயோர கிராமங்களில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி சர்வோதயா தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (75). திருமண புரோக்கர். கடந்த 21ம் தேதி இரவு, ஏற்கனவே கந்தசாமிக்கு அறிமுகமான 3 பேர், அவரது வீட்டுக்கு வந்து அஞ்சுகிராமம் அருகே பெண் பார்க்க வருமாறு அழைத்தனர். அவர்களுடன் கந்தசாமி காரில் சென்றார். அவரை ஆரல்வாய்மொழி அருகே உள்ள கண்ணுபொத்தை பகுதிக்கு கடத்தி வந்த கும்பல் கந்தசாமியின் தலையில் கத்தியால் குத்தி அவர் அணிந்திருந்த தங்க செயின், மோதிரங்கள், பிரேஸ்லெட் உள்பட 23 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றனர்.

ரத்த காயத்துடன், புதருக்குள் கந்தசாமியை வீசி விட்டு சென்றனர். ஆரல்வாய்மொழி போலீசார் கந்தசாமியை மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் நடந்த பகுதி பணகுடி காவல் நிலையத்துக்கு உட்பட்டது என்பதால், பணகுடி காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். கந்தசாமி எப்போதும் நகைகள் அணிந்து இருப்பார். அதை தெரிந்து கொண்டு தான் கும்பல் கைவரிசை காட்டி இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஒருமுறை இந்த கும்பல் கந்தசாமியை, அஞ்சுகிராமம் அருகே தான் அழைத்து சென்றனர். எனவே குமரி, நெல்லை எல்லையோர கிராமங்களில், இரு மாவட்ட தனிப்படை போலீசாரும் இணைந்து விசாரணை மேற்ெகாண்டு வருகிறார்கள். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>