சாக்குலூத்து மெட்டு சாலை திட்டம் கோரி தேவாரத்தில் முழு கடையடைப்பு

தேவாரம், ஜன. 24: சாக்குலூத்து மெட்டு சாலை திட்டத்தை நிறைவேற்ற கோரிதேவாரத்தில் முழு கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி மாவட்டத்தில் கேரளாவை இணைக்கும் முக்கிய சாலைகளாக கம்பம் மெட்டு, குமுளி, போடி மெட்டு உள்ளன. இச்சாலைகள் வழியே தினந்தோறும் கேரளாவிற்கும், தமிழகத்திற்கும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக சரக்கு லாரிகள், சுற்றுலா வாகனங்கள் போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்நிலையில் தேவாரத்தில் இருந்து 4 கிமீ தொலைவில் மிக எளிதாக கேரளாவை இணைக்கக்கூடிய சாக்குலூத்து மெட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேவாரம் பொதுமக்கள், வர்த்தகர்கள் தமிழக அரசை கேட்டு வருகின்றனர்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை கண்டித்தும், சாக்குலூத்து மெட்டு சாலை திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நேற்று தேவாரத்தில் முழு கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக சங்கம், காய்கறி கமிஷன் கடையினர் கடையடைப்பு நடத்தினர். இதேபோல் தேவாரம் பஸ்ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அனைத்து பொது நல அமைப்புகள், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: