மின்வாரிய அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளர் அடித்து படுகொலை அனுப்பானடியில் பயங்கரம்

அவனியாபுரம், ஜன. 24: குடி போதையில் ஏற்பட்ட தகராறில் மின்வாரிய தூய்மைப் பணியாளர் அடித்து கொலை செய்தது தொடர்பாக, மின்பாதை ஆய்வாளரை போலீசார் கைது செய்தனர். மதுரை பொட்டபாளையத்தை சேர்ந்தவர் அழகுமலை (55). இவர், மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள மின்நிலையத்தில் தூய்மைப் பணியாளராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார். அப்போது சிந்தாமணி மின்நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரியும் மாடக்குளம் பிச்சை, அழகுமலையுடன் சேர்ந்து மின்வளாக அலுவலகத்தில் அமர்ந்து மது அருந்தினார். போதை தலைக்கேறியதும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஆத்திரமடைந்த மின்பாதை ஆய்வாளர் பிச்சை, தூய்மைப் பணியாளர் அழகுமலையை கட்டையால் தாக்கினார். இதில், படுகாயம் அடைந்த அழகுமலை ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனைக் கண்ட பிச்சை அதிர்ச்சியடைந்து, அனுப்பானடி பகுதி மின்வாரிய இயக்குனருக்கு தகவல் தெரிவித்ததுடன், 108 ஆம்புலன்சுக்கும் தெரிவித்துள்ளார். அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது, அழகுமலை இறந்திருந்தது தெரிந்தது. தகவலறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் அழகுமலையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிச்சையை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>