×

திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு விழா மட்டுமே நடத்த அனுமதி: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு விழா மட்டுமே நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த மாணிக்கமூர்த்தி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது. இந்த தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா வரும் ஜன. 6ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஏற்கனவே, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கந்தூரி நடத்த தடை விதித்துள்ள நிலையில் தர்கா கமிட்டி கந்தூரி நடைபெறும் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கந்தூரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.  இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்ஜன்குமார் ஆஜராகி, ‘‘ஏற்கனவே மதுரை அமர்வில் மலை உச்சியில் கால்நடைகளை பலியிடவும், அசைவ உணவுகளை பரிமாறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் வீராகதிரவன், பாஸ்கரன் ஆஜராகி, ‘‘சந்தனக்கூடு விழாவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்தவிதமான நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்க மாட்டோம்’’ என்றனர். தர்கா தரப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆஜராகி, ‘‘இந்த மனு விசாரணைக்கே உகந்தது அல்ல.

ஒரே கோரிக்கையை வலியுறுத்தி 2 முறை மனு தாக்கல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கந்தூரி விழா நடத்தக் கூடாது என உத்தரவு உள்ளது. திருப்பரங்குன்றம் பகுதியில் அல்ல. மலைக்குக் கீழே கந்தூரி நடத்தலாம்’’ என்றார். மனுதாரர் தரப்பில், ‘‘மலை உச்சியில் கால்நடைகளை பலியிடுதல் மட்டுமல்ல. அசைவ உணவு பரிமாறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டது.

அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், ‘‘இந்த விவகாரத்தில் இரு தரப்பினரின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது’’ என்றனர். அப்போது நீதிபதி, ‘‘அவ்வாறு பாதிக்கப்பட்டாலும், ஏற்கனவே பாதிக்கப்பட்டதற்கும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது: தர்கா நிர்வாக கமிட்டியினர் சந்தனக்கூடு விழாவை மட்டும் நடத்த வேண்டும்.

விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். விலங்குகளை பலி கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விலங்குகளை எடுத்துச் செல்வது, அசைவ உணவு சமைப்பது மற்றும் எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மலையின் அடித்தளத்தில் இருந்து மலையின் உச்சி வரை அமல்படுத்தப்படும். இந்த உத்தரவுகளை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.

நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் பல வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். சட்டம், ஒழுங்கை காவல்துறை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், அரசு மற்றும் தர்கா தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

* திருப்பரங்குன்றம் மலையில் போலீசார் நிற்க கூடாதா? ஐகோர்ட் கிளை நீதிபதி கேள்வி
மதுரை மாவட்டம், எழுமலையைச் சேர்ந்த ராம.ரவிக்குமார், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரதான மனு மீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நிறைவேற்றாதது வரை, கோயில் அடிவாரம், படிக்கட்டுகள் உட்பட கோயிலுக்கு சொந்தமான இடங்களில் யாரையும் அனுமதிக்கவும், பொருட்கள் கொண்டுச் செல்லவும், விழா நடத்தவும், ஊர்வலம் நடத்தவும் இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை மேற்பார்வை பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள போலீசாரை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, ‘‘காவல்துறை அந்த இடத்தில் இருக்கவே கூடாது என்பது போல் உள்ளதே? இந்த மனு ஏற்கத்தக்கதல்ல’’ என்றார். அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆகியோர் ஆஜராகி, ‘‘இதுவரையில் இவ்வாறு ஒரு புகார் எழுந்ததில்லை’’ என்றனர்.

அப்போது நீதிபதி, ஏற்கனவே கொடிமரத்தில் கொடி ஏற்றக்கூடாதென ஒரு உத்தரவு உள்ளதாக தோன்றுகிறது. அவ்வாறெனில் நடவடிக்கை எடுக்க வேண்டும் தானே? என்றார். பின்னர், மனுவிற்கு மதுரை மாநகர போலீஸ் கமிஷனர், திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழு தலைவர், கோயில் செயல் அலுவலர், தர்கா பரம்பரை அறங்காவலர் ஆகியோர் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜன.6க்கு தள்ளி வைத்தார்.

Tags : sandalwood ,Thiruparankundram ,Court ,Madurai ,High Court ,Manikamoorthy ,High Court Madurai ,Sikandar Badusha Dargah ,Dargah… ,
× RELATED திருமழிசை -திருவள்ளூர்...