×

விண்ணை முட்டும் விலையேற்றம் இரும்பு டன்னுக்கு ரூ.15 ஆயிரம் வரை உயர்வு கட்டுமானத் தொழில் கடும் பாதிப்பு

மதுரை, ஜன. 24: வீடு மற்றும் கட்டிட பணிகளுக்கும், கிரில் கேட் தயாரிப்பு உள்ளிட்ட ஒர்க்ஷாப் தொழில்களுக்கும் இரும்பின் தேவை முக்கியமாகும். சில வாரங்களுக்கு முன், டன் ஒன்றுக்கு ரூ.45 ஆயிரமாக இருந்த இரும்புக் கம்பியின் விலை, 10 நாட்களுக்கு முன், ரூ.62 ஆயிரமாக உயர்ந்தது. அதாவது டன் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் வரை விலை உயர்ந்தது. இரும்பு பைப் கிலோ ரூ.65ல் இருந்து ரூ.81 ஆக உயர்ந்தது. அதாவது டன் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் வரை விலை உயர்ந்துள்ளது. இதனால், கட்டிடம் கட்டுவோர், கிரில்கேட் தயாரிப்போர், வெல்டிங் பட்டறை உள்ளிட்ட ஒர்க்ஷாப் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தென்மதுரை இரும்பு கிரில் உற்பத்தியாளர்கள் முன்னேற்ற சங்க அவசரக்கூட்டம், மதுரை தெற்குவாசலில் உள்ள சங்க கட்டிடத்தில், தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. செயலாளர் சுந்தரேஸ்வரன், பொருளாளர் முனியாண்டி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இரும்பு விலை உயர்வால், கிரில் கம்பெனிகள் நஷ்டம் அடைந்துள்ளது. எனவே, மத்திய-மாநில அரசுகள் இரும்பு விலை உயர்வை கட்டுப்படுத்தி, நிரந்தர விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தலைவர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், ‘பெட்ரோல், டீசல், தங்கத்தைப்போல, இரும்பு விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், கட்டுமானத் தொழில், பாடி பில்டிங் கட்டும் தொழில் பாதிக்கப்படும். மதுரை மாவட்டத்தில் 1,200க்கும் மேற்பட்ட கிரில் பட்டறைகள் உள்ளன. இவைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, இரும்புக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும்’ என்றார்.
வண்டியூர் கட்டிட கான்டிராக்டர் செழியன் கூறுகையில், ‘கட்டுமான தொழிலுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு விலை உயர்வு மற்றும் கட்டுமான பொருட்கள் விலை உயர்வால், ஒரு சதுர அடிக்கு ரூ.2,200 வாங்கியது, ரூ.200 வரை அதிகம் உயர்த்தி ரூ.2,400 வாங்க வேண்டியநிலை உள்ளது. மேலும், தற்போது தினமும் விலை உயர்ந்து வருவதால், கான்ட்ராக்ட் எடுத்து வேலையை செய்து கொடுப்பது என்பது சிரமமானதே” என்றார்.

Tags : price hike ,
× RELATED விலைவாசி உயர்விற்கு ஒன்றிய அரசுதான் காரணம்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு