விளாத்திகுளம், ஜன. 3:விளாத்திகுளம் வேளாண்மை உதவி இயக்குநர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விளாத்திகுளம் வட்டாரத்தில் சாகுபடி செய்துள்ள பயிர்களை மின்னணு பயிர் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. நடப்பு ராபி பருவத்தில் மக்காச்சோளம், சோளம், கம்பு, உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, சூரியகாந்தி, வெங்காயம் மற்றும் மிளகாய் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த பயிர்களை மின்னணு பயிர் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ள தன்னார்வலர்கள், ஆர்வமுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்கள் வேளாண்மை உதவி இயக்குநர், வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தன்னார்வலர்கள் மின்னணு பயிர் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ள ஆண்ட்ராய்டு செல்போன் வைத்திருக்க வேண்டும். தாங்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள வருவாய் கிராமங்களில் கணக்கு எடுக்கும் பணியை மேற்கொள்ளலாம். நில அளவை எண்ணில் உள்ள ஒரு உட்பிரிவுக்கு ரூ.3 வீதம் மின்னணு பயிர் கணக்கெடுக்கும் பணியாளரின் வங்கி கணக்கில் தொகை செலுத்தப்படும். இப்பணியை காலை முதல் மாலை வரை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
