அணைக்குடம் கிராமத்தில் சேறும் சகதியுமான சாலை சீரமைக்கப்படுமா?

தா.பழூர், ஜன.24:தா.பழூர் அருகே அணைக்குடம் கிராமத்தில் சேறும் சகதியுமான சாலை சீரமைக்காததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் நியாயவிலை கடை செல்லும் சாலை மற்றும் தேவமங்கலம் செல்லும் சாலை என அனைத்து சாலைகளும் சேறும் சகதியுமாக உள்ளது. மழை ஓய்ந்து ஒருவார மாகியும் சாலைகள் சேறும் சகதியுமாக உள்ளது. சாலையில் பெரிய அளவிலான பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

சாலையில் பெரிய அளவில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறிக் கீழே விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இச்சாலையில் நடந்து செல்பவர்களும் சேற்றில் கால் வைத்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகனங்கள் செல்லும்போது அருகில் உள்ள வீடுகளில் சேறு கலந்த தண்ணீர் தெளிப்பதால், வீட்டின் முன் நிற்பவர்கள் மீது சேற்றை வாரி அடித்து செல்கின்றனர். இதே போன்ற நிலை தொடர்ந்து நீடித்து வருவதாகவும், தேங்கி நிற்கும் நீரால் துர்நாற்றம் வீசுவது மட்டும் அல்லாமல் கொசுக்கள் ஒருபுறம் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு உட்பட பல்வேறு வைரஸ் கிருமிகளால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், சாலையில் நீர் தேங்காமல் வெளியேற்றவும் , அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான புதிய தார் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>