கொள்ளிடத்தில் தொடர் மழை ஆச்சாள்புரத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சிவன் கோயில் குளம்

கொள்ளிடம், ஜன. 24: கொள்ளிடத்தில் தொடர் மழை பெய்ததால் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆச்சாள்புரம் சிவன் கோயில் குளத்தில் தண்ணீர் நிரம்பியது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரத்தில் புகழ்பெற்ற தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் வசிட்டர், பராசரர், பிருகு, ஜமதக்கினி முதலிய முனிவர்களுக்கு இறைவன் கயிலை காட்சியை காட்டி அருளியதாகவும், முருகனுக்கு சிவபெருமான் சிவலோகம் அளிக்கும் தலம் இதுவே என்று அருளி சென்றதாகவும், திருமால் இத்தல இறைவனை வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றதாகவும், நான்முகன் படைத்தல் தொழில் கை வரப் பெற்றதாகவும் புராணம் கூறுகிறது. திருஞானசம்பந்தருக்கு திருமணம் நடந்தபோது இறைவன் காட்சி தந்து முக்தியளித்த தலமும் இதுவே. இதனால் கோயில்நல்லூர் பெருமணம் என்றும் போற்றப்படுகிறது. இக்கோயிலில் முன்புள்ள குளத்துக்கு பஞ்சாட்சரம் தீர்த்தம் என்றும், முருகு தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோயிலின் குளம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நீ நிறைந்தே காணப்பட்டது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. தண்ணீர் நிரப்புவதற்கு வழியும் இல்லாமல் இருந்தது. போதிய மழை பெய்யாமல் இருந்ததால் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து இல்லை. கோயில் குளத்துக்கும் தண்ணீர் செல்லாமல் போனது.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்ததால் கோயில் குளம் நிரம்பியது. 20 ஆண்டுகளாக வறண்டு கிடந்த இந்த குளத்தில் கடந்த கனமழையால் தண்ணீர் நிரம்பியது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

1,000 ஆண்டுகுளுக்கு முன்பாகவே இந்த குளத்துக்கு வாய்க்கால் வழியே தண்ணீர் செல்லவும், தேங்கிய நீர் எளிதில் வெளியேறி வடிந்து செல்லவும் வாய்க்கால் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்கால் மற்றும் வெளியேறி செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் குளத்துக்கு தண்ணீர் வர முடியாத நிலையும் உள்ளது. எனவே பக்தர்களின் நலன்கருதி இந்த கோயில் குளத்துக்குரிய வாய்க்கால்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தண்ணீர் எளிதில் சென்று வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>