சாலை பாதுகாப்பு விழாவையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி, ஜன.24: கிருஷ்ணகிரி  வட்டார போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, நேற்று நகர காவல் நிலையம்  மற்றும் வட்டார போக்குவரத்துறை சார்பில், இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி  நடந்தது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் துவங்கிய பேரணிக்கு,  டிஎஸ்பி சரவணன் தலைமை வகித்தார். வட்டார போக்குவரத்து அலுவலர்  வெங்கடேசன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள்  மாணிக்கம், அன்புசெழியன் முன்னிலை வகித்தனர். பேரணியை ஏடிஎஸ்பி  ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில், பெண் போலீசார்,  மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், போலீசார், ஓட்டுனர் பயிற்சி பள்ளி  நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்தவாறு பங்கேற்றனர்.  லண்டன்பேட்டை, பெங்களூரு சாலை, 5 ரோடு ரவுண்டானா, சென்னை சாலை  வழியாக, தனியார் திருமண மண்டபத்தை சென்றடைந்தது.

பின்னர், அங்கு நடந்த  விழிப்புணர்வு கூட்டத்தில், ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம்,  விபத்து உயிரிழப்புகள் குறித்து பேசப்பட்டது. அனைவருக்கும் விழிப்புணர்வு  துண்டுபிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது பற்றி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பர்கூர் டிஎஸ்பி தங்கவேல் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பேரணியில் புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன், எஸ்ஐ மகேந்திரன், பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேரணி குள்ளனூரில் துவங்கி தாலுகா அலுவலகம், நான்கு சாலை சந்திப்பு, வடம்பலம்பட்டி, பஸ்நிலையம் வழியாக சென்றது.

Related Stories:

>