தர்மபுரியில் தைப்பூச விழா இன்று துவக்கம் பெண்கள் மட்டுமே வடம் பிடிக்கும் தேரோட்டம்

தர்மபுரி, ஜன.24: தர்மபுரியில் தைப்பூச தேர்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பெண்களே வடம்பிடிக்கும் தேரோட்டம் வரும் 30ம் தேதி நடக்கிறது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில், தைப்பூச தேர் திருவிழா இன்று(24ம் தேதி) காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.  நாளை(25ம் தேதி) இரவு 9 மணிக்கு புலி வாகன உற்சவம் நடக்கிறது. வரும் 28ம் தேதி சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. 29ம் தேதி மாலை 5 மணிக்கு விநாயகர் ரத தேரோட்டம் நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான 30ம் தேதி காலை, பெண்களே தேரை நிலை பெயர்க்கும் மகாரத தேர் திருவிழா நடக்கிறது. இதனை முன்னிட்டு 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.  விழாவில், அமைச்சர் அன்பழகன், கலெக்டர் கார்த்திகா, எஸ்.பி. பிரவேஷ் குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும் மற்றும் செங்குந்த மரபினர் செய்துள்ளனர்.

அதேபோல், இண்டூர் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தேர்த்திருவிழா இன்று(24ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும் 28ம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், அன்னதானம் நடக்கிறது. 29ம் தேதி மாலை 5 மணிக்கு விநாயகர் ரத தேரோட்டம் நடக்கிறது. முக்கிய நாளான வரும் 30ம் தேதி, மகளிர் மட்டும் பங்கேற்று தேரை நிலை பெயர்க்கும் திருத்தேர் திருவிழா நடக்கிறது.

Related Stories:

>