சிறுதானியம் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு சலுகை

தர்மபுரி, ஜன.24: தர்மபுரி மாவட்ட கலெக்டர் கார்த்திகா வெளியிட்டுள்ள அறிக்கை: பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறுநிறுவனங்களுக்கான திட்டம், 2020-2021ம் ஆண்டு முதல் 2024-2025 வரை 5ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டம், ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையில் செயல்படுத்தப்படும். மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம், தனிநபர் அடிப்படையில், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில் நுட்பபயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். மேலும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவிகுழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதிஉதவி வழங்கப்படும். சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பீட்டில் 35சதவீதம் அல்லது அதிகபட்சமாக ₹10லட்சம் வரை மானியம் பெற வாய்ப்புள்ளது. வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும், சிறுஉணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தொழில் கடன் தொகை, வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>