சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை பணியை 15 நாளில் முடிக்க உத்தரவிட கோரி வழக்கு: நெடுஞ்சாலை துறை பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைக்கப்படும் சுரங்கப்பாதை பணிகளை 15 நாட்களில் முடிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் ரூ.400 கோடி செலவில் ‘சென்ட்ரல் சதுக்கம்’ என்ற பெயரில் சுரங்கப்பாதை, பேருந்து நிலையம், மூன்றடுக்கு சுரங்க வாகன நிறுத்தம் கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், சுரங்கப்பாதை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாலத்தில், அடிக்கடி வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின்றன.

இதனால், அவ்வழியே போக்குவரத்து தடைபடுகிறது. எனவே, 15 நாட்களில் இந்த பணிகளை முடிக்க உத்தரவிட கோரி, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் அஜய் பிரான்சிஸ் லயோலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணிகள் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு, அதன் மீது இரும்பு தகடுகளை கொண்டு தற்காலிக பாலம் அமைத்து, போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி துறைமுகத்தில் இருந்து வந்த கன்டெய்னர் லாரி, சுரங்கப்பாதைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஜப்பான் போன்ற நாடுகளில் மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒரு வாரத்தில் இதுபோன்ற சுரங்க நடைபாதைகள் அமைக்கப்படுகிறது. அதேபோல், இந்த சுரங்கப்பாதை பணியையும் விரைந்து மேற்கொண்டு, 15 நாட்களில் முடிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த தற்காலிக பாலத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட வேண்டும், என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக, 4 வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், சென்னை மாநகராட்சி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>