சேலம்: மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பினால் அவர்கள் மேல்தான் விழும் என்று ராமதாசுக்கு அன்புமணி ஆதரவு எம்எல்ஏ பதிலடி கொடுத்து உள்ளார். சேலத்தில் நேற்று முன்தினம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், ராமதாஸ், அவரது மகள் ஸ்ரீகாந்தி, பேரன் சுகந்தன், கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, இணை பொதுச்செயலாளர் அருள் எம்எல்ஏ ஆகியோர் அன்புமணியை கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்நிலையில், அன்புமணி ஆதரவு மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சேலத்தில் நடந்த பொதுக்குழுவில் 95 சதவீதம் பேர் எங்களுடன் இருக்கிறார்கள் என கூறியிருக்கிறார்கள். அப்படி ஒன்றும் இங்கு கூட்டம் கூடவில்லை. நான் இரண்டு ‘ரவுண்டு’ சுற்றி வந்து பார்த்தேன். கூட்டமே இல்லாமல் காலியாக இருந்தது. 95 சதவீதம் பேர் இருப்பதாக கூறினால், இதே மண்டபத்தில் நான் வரும் 5ம் தேதி கூட்டத்தை கூட்டி காட்டட்டுமா? என சவால் விடுகிறேன். வாங்கிய பணத்துக்காகவும், வெறுப்பு அரசியல் காட்டுவதற்காகவும், 2 எம்எல்ஏக்களும் இந்த கூட்டத்தை நடத்தியுள்ளனர். 10.5 சதவீத இடஒதுக்கீடு பற்றி யாரும் பேசவில்லை. அன்புமணியை திட்டுவதற்காக கூட்டம் கூட்டியிருக்கிறார்கள். மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பினால், அவர்கள் மேல் தான் விழும்,’’ என்றார்.
* ‘ராமதாஸ் தேர்தல் நாடகம் கூட்டணி குறித்து அன்புமணி அறிவிப்பார்’
பாமக அன்புமணி தரப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் கார்த்தி சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘பாமக பெயரில் செயற்குழு, பொதுக்குழு நாடகத்தை சேலத்தில் நடத்தியுள்ளார்கள். அது பாமக பொதுக்குழு அல்ல. பொதுக்குழு என நடத்திய நாடகத்தில், ராமதாஸ் கண்ணீர் விட்டு அழுது நாடகமாடியுள்ளார். அவரது கண்ணீரை துடைப்பதை போல ‘கர்சிப்’ எடுத்து கொண்டு, பக்கத்தில் இருந்தவர்களும் நடித்தார்கள். தேர்தல் நேரத்தில், இப்படி அழுது நாடகம் நடத்தியுள்ளார். பாமகவை இரண்டாக உடைக்க உடன் இருக்கும் ஜி.கே.மணி, அருள் ஆகியோர் செயல்படுகிறார்கள். பொங்கலுக்கு முன்பு பாமக யாருடன் கூட்டணி என்பதை தலைவர் அன்புமணி அறிவிப்பார். தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நிச்சயம் வெற்றிக் கூட்டணியை உருவாக்கி, ஒப்பந்தமிட்டு பொங்கலுக்குள் அறிவிப்போம்’ என்றார்.
