×

சட்ட விரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை

திருப்பூர், ஜன. 22: திருப்பூர் மாவட்டத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜா,  பயிர் பாதுகாப்புத்துறை விஞ்ஞானி கவிதா ஆகியோர் பயிர் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை காணொலிக் காட்சி மூலம்  விவசாயிகளுக்கு விளக்கினார்கள்.
 
பின்னர், விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை கூறியதாவது: திருப்பூர், மாவட்டம் வெள்ளகோவில் பிஏபி கடைமடை விவசாயிகள், கடந்த சில நாட்களாக உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 48,000ம் ஏக்கர் பாசன பகுதியில் 7 நாள் தண்ணீர் திறப்பு, 7 நாள் தண்ணீர் அடைப்பு என்ற முறையில் பயன்பெற்று வந்தோம். தற்போது 3 நாட்கள் மட்டுமே வழங்குகின்றனர். இதனால் விவசாயிகள் பெரும் அவதியை சந்தித்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

தாராபுரம் வட்டம், பொன்னாபுரம் கிராமம் குள்ளிப்பள்ளம் என்ற இடத்தில் காலத்தைச் சேர்ந்த சில நபர்கள் 20 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளிடம் எந்தவொரு அனுமதியும் பெறாமல் விவசாய நிலத்தின் மேல் பகுதியில் 200க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் தேங்காய் துண்டுகளை கொண்டு வந்து குவித்து வைத்து தீ மூட்டி எரிக்கிறார்கள். இதனால் குள்ளிப்பள்ளம் பகுதியில் விவசாய நிலங்கள், கால்நடை மேய்ச்சல் நிலங்களை புகை மூட்டம் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், கால்நடைகள் ஒன்றும் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அது சம்பந்தமாக தாராபுரம் வட்டாட்சியர், தாராபுரம் சப்-கலெக்டர்  அனைவரிடமும் பலமுறை மனு அளிக்கப்பட்டது. ஆனாலும், தொடர்ந்து கரி தொட்டி எரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. எனவே, இதன் மீது கண்டிப்பாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். காங்கேயம் வட்டமலை கிராமம் அவினாசிபாளையம் புதூரில் அமைந்துள்ள கார்பன் உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் மாசு அடைந்த தண்ணீரால் விவசாய நிலங்கள், கிணறுகள் பாதிப்படைவது தொடர்பாக பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது.ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags : factories ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...