×

சீரான குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

பொள்ளாச்சி, ஜன.22:  சீரான குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி அருகே சமத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளுக்கு, கம்பாளபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதில், பேரூராட்சி முதலாவது வார்டுக்குட்பட்ட வி.வி.காலனி, மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த இரண்டு மாதமாக குடிநீர் விநியோகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், நேற்று காலை திடீரென காலி குடங்களுடன் வால்பாறை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையறிந்த கோட்டூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சமாதானம் ஆகாத மக்கள், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீசார், பேரூராட்சி அதிகாரிகளிடம் உங்கள் கோரிக்கையை தெரிவித்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், பேரூராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : siege ,municipality office ,
× RELATED எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் மகளிர் தினவிழா