×

வேளச்சேரியில் 10 ஆண்டாக கிடப்பில் போட்டுள்ள வெள்ளத்தடுப்பு பணிகளை முடிக்க கோரி திமுக சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்: எம்பி., எம்எல்ஏக்கள் பங்கேற்பு

வேளச்சேரி: திமுக ஆட்சியின்போது கொண்டுவந்த வெள்ளத்தடுப்பு பணிகளை கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு, வேளச்சேரி பகுதியை வெள்ளச்சேரியாக மாற்றிய அதிமுக அரசை கண்டித்து, சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நேற்று காலை வேளச்சேரி காந்தி சாலையில் நடந்தது. மாவட்ட செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தென்சென்னை நாடாளுமன்ற எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், வேளச்சேரி எம்எல்ஏ வாகை சந்திரசேகர், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மழைக்காலங்களில் வேளச்சேரியில் மழைநீர் தேங்காத அளவுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தாத தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் பொதுப்பணித் துறையின் மெத்தன போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ பேசுகையில், ‘‘10 வருடத்துக்கு முன் 500 ஏக்கராக இருந்த வேளச்சேரி ஏரி, தற்போது நீர்வழி பாதை ஆக்கிரமிப்பினால் 50 ஏக்கராக சுருங்கிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் வேளச்சேரி பகுதியில் வெள்ளம் சூழ்கிறது என பசுமை தீர்ப்பாயம் கூறி வருகிறது. தமிழக அரசு இதற்காக ஒரு குழுவை அமைத்ததே தவிர, உரிய தீர்வை ஏற்படுத்தவில்லை.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது, வேளச்சேரியில் சுமார் 150 கி.மீ தூரத்துக்கு மழைநீர் கால்வாய்களை அமைத்தார். மேலும் வீராங்கல் ஓடையை அகலப்படுத்தி, தூர்வார ரூ.128 கோடி நிதி ஒதுக்கினார். அப்பணி துவங்கிய சமயத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதன்பின்னர், அப்பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு வேளச்சேரி ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த ரூ.25 கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கினார். ஆனால், கடந்த 3 வருடங்களாக அங்கு தூர்வாரும் பணி நடைபெறவில்லை. வேளச்சேரியில் வெள்ளம் சூழ்வதற்கு முக்கிய காரணம், இங்குள்ள வீராங்கல் ஓடையை சீரமைத்து, புதிய நீர்வழி கால்வாய்கள் அமைக்காததுதான். திமுக ஆட்சி அமைந்தவுடன், முதலில் வேளச்சேரியின் வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்,’’ என்றார்.

Tags : demonstration ,completion ,DMK ,MPs ,Velachery ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்