×

படிக்க வாங்கி கொடுத்த ஸ்மார்ட் போனில் விளையாட்டு ஆன்லைன் கேமில் ₹60 ஆயிரம் இழந்ததால் செயின் பறிப்பில் ஈடுபட்ட பள்ளி மாணவன்: தாயின் நகைகளையும் அடகு வைத்தது அம்பலம்

பெரம்பூர்: வீட்டில் இருந்து படிக்க பெற்றோர் வாங்கிகொடுத்த ஸ்மார்ட் போனில், ஆன்லைன் கேம் விளையாடி ரூ.60 ஆயிரத்தை இழந்ததால், பள்ளி மாணவன் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை கொடுங்கையூர், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (48). இவர், கடந்த 19ம் தேதி இரவு 11 மணிக்கு கொடுங்கையூர் வாசுகி நகர் 7வது தெரு வழியாக நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு சிறுவன், ராஜேஸ்வரி கழுத்தில் கிடந்த 2 சவரன் செயினை அறுத்துக் கொண்டு தப்பினான். இதுகுறித்து அவர் கொடுங்கையூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது, 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவனது புகைப்படத்தை வைத்து தேடியபோது, கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள ஒரு வீட்டில் அந்த சிறுவன் இருப்பது தெரியவந்தது. அங்கு சோதனை செய்தபோது, செயின் பறிப்பில் ஈடுபட்டபோது, சிறுவன் பயன்படுத்திய உடைகள் இருந்தன. இதனையடுத்து போலீசார், அங்கு காத்திருந்து சிறுவன் வந்ததும் அவனை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: செயின் பறிப்பில் கைதான சிறுவன், பெரம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறான். ஆன்லைன் வகுப்புக்காக பெற்றோரிடம் கேட்டு செல்போன் ஒன்றை வாங்கியுள்ளான். அதில், வகுப்பு நேரம் போக, மற்ற நேரத்தில் கலர் கிரேடிங் எனப்படும் ஆன்லைன் விளையாட்டை பதிவிறக்கம் செய்து, தனது அம்மாவின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி தொடர்ந்து பணம் வைத்து விளையாடி வந்துள்ளான் அதில், ரூ.60 ஆயிரம் வரை இழந்துள்ளான். மேலும், விளையாடுவதற்கு பணம் இல்லாததால் வீட்டில் இருந்த நகைகளை, யாருக்கும் தெரியாமல் எடுத்து, அடமானம் வைத்து அதை தாயின் வங்கி கணக்கில் செலுத்தி, மீண்டும் விளையாடியுள்ளான்.

ஒரு கட்டத்தில் வீட்டில் இருந்த நகைகளை காணவில்லை என கேட்டபோது, ஒன்றும் தெரியாதது போல் இருந்துள்ளான். போலீசில் தாய் புகார் அளித்தால் விசாரணையில் சிக்கிவிடுவோம், என நினைத்த சிறுவன் வேறு வழியில்லாமல் கடந்த 19ம் தேதி சாலையில் நடந்து சென்ற ராஜேஸ்வரியின் 2 சவரன் தங்க செயினை பறித்து, அதை ஒரு அடமானம் வைத்து, தனது தாய் நகையை மீட்டு மீண்டும் வீட்டில் வைத்துள்ளான். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து, மாணவனின் எதிர்காலம் கருதி, அவனை கைது செய்யாமல், அவனது பெற்றோரை காவல் நிலையம் வரவழைத்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

* பெற்றோர்களே உஷார்...
ஆன்லைன் வகுப்புக்காக தங்களது குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்கும் பெற்றோர், வகுப்பு நேரம் போக, மீதி நேரத்தில் அந்த போனில் தங்களது குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிப்பதில்லை. எந்த நேரமும் செல்போன் பயன்படுத்தும் குழந்தைகளை பார்த்து, கல்வி சம்பந்தமாக பயன்படுத்துவதாக பலர் கருதி விடுகின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளும் சிறுவர்கள், ஆன்லைன் விளையாட்டு மற்றும் ஆபாச வலைதலங்களில் அதிகப்படியாக பொழுதை கழிக்கின்றனர். இதனால், அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகிறது. எனவே, பெற்றோர் இதுபற்றி விழிப்புடன் இருக்க வேண்டும், என ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Schoolboy ,chain robbery ,game ,
× RELATED ரம்மி விளையாட்டில் ரூ.30 ஆயிரம் இழப்பு போலீஸ்காரர் தற்கொலை