×

கூட்டு பண்ணைய திட்டத்தில் 13900 விவசாயிகள் சேர்ப்பு

ஈரோடு, ஜன. 22: ஈரோடு மாவட்டத்தில் கூட்டு பண்ணைய திட்டத்தில் 13,900 விவசாயிகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சின்னசாமி கூறியதாவது: வேளாண்துறையின் கீழ் கூட்டுப்பண்ணையத்திட்டம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர்கள் குழு ஏற்படுத்தி ரூ.5 லட்சம் தொகுப்பு நிதியாக வழங்கப்படுகின்றது.

இத்திட்டத்தில் சேரும் விவசாயிகளுக்கு வேளாண் தளவாட இயந்திரங்கள் வழங்கப்படுகின்றது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 13,900 விவசாயிகள் இணைக்கப்பட்டு குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளது. நடப்பாணடில் மட்டும் 35 குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளது. இக்குழுக்களுக்கு டிராக்டர், பவர் டில்லர், சுழற்கலப்பை உள்ளிட்ட இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.5.2 கோடி தொகுப்பு நிதியாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் உழவர் உற்பத்தியாளர் கம்பெனி உருவாக்கி, மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு, விதை, உரம், பூச்சி மருந்து வணிகம், விதை சுத்திகரிப்பு என பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு இணை இயக்குநர் சின்னசாமி கூறினார்.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு