பாலக்கோடு, டிச.30: மாரண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் அமைந்துள்ள அரசு உதவி பெறும் செவிலியர் பயிற்சி பள்ளியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், மாணவிகளின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக, வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு ஆலோசனையின் பேரில், தாய் நல சேய் அலுவலர்கள் முன்னிலையில் பஞ்சப்பள்ளி அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவர் பிரித்விராஜ் யோகா பயிற்சி அளித்தார். மன அழுத்தத்தால் ஏற்படக்கூடிய உடல், மனம் சார்ந்த பிரச்னைகளுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகளான உணவு, எளிய வகை வாழ்வியல் முறை மாற்றங்கள், எளிய உடற்பயிற்சி, அக்குபிரஷர் மற்றும் மன அழுத்தத்தை தவிர்க்க உதவும் யோகாசனங்களான பிராணயாமம், யோக நித்திரை மற்றும் தியான பயிற்சிகள் அளிக்கப்பட்டன. நிகழ்ச்சியில், மருத்துவ அலுவலர்கள் மற்றும் தாய் சேய் நல அலுவலர்கள் பார்கவி, ஜெயந்தி, கலைவாணி, சின்னப்பொண்ணு, செவிலியர்கள் பல்நோக்கு பணியாளர் வெங்கடேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
