தேவிகுளம் சட்டமன்ற தொகுதியை பொது தொகுதியாக மாற்ற எதிர்ப்பு

கூடலூர், ஜன. 22: தேவிகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அடிமாலி நகரைச் சேர்ந்த இன்பன்ட் தாமஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: 1957 முதல் தேவிகுளம் சட்டமன்ற தொகுதி ரிசர்வ் தொகுதியாகவே நீடித்து வருகிறது. பலதரப்பட்ட மக்கள் வாழும் தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில், மூணாறை சுற்றி இருக்கும் தலைவர்கள் மட்டுமே தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுவருவது சமூக நீதிக்கு எதிரானதாகும்.

மற்றவர்களுக்கும் தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதே சமூகநீதி ஆகும். எனவே தேவிகுளம் சட்டமன்ற தொகுதியை பொது தொகுதியாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார். மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், மத்திய தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழர்களுக்கென்று கேரளாவிலிருக்கும் ஒரே தொகுதியான தேவிகுளம் சட்டமன்ற தொகுதியை பொது தொகுதியாக மாற்ற தமிழக விவசாய சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், ‘கேரளாவில் உள்ள 140 சட்டமன்ற தொகுதிகளில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு, கோட்டயம் உட்பட 14 மாவட்டங்களிலும் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் இடத்தில் தமிழர்கள் இருக்கின்றனர்.

ஆனாலும் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது, இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் சட்டமன்ற தொகுதி மட்டுமே. அது ரிசர்வ் தொகுதியாக நீடிப்பதால் மட்டுமே தமிழர் வசம் இருக்கிறது. பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டு விட்டால் கண்டிப்பாக அதில் ஒரு தமிழரை நிறுத்த எவ்வித வாய்ப்பும் இருக்காது. தேவிகுளம் தொகுதியை தக்க வைத்துக்கொள்ள தமிழ் சமூகம் முன்வர வேண்டும்’ என்றார்.

Related Stories:

>