ஒரத்தநாட்டில் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தில் காசநோய் பரிசோதனை

ஒரத்தநாடு,ஜன.22: ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வெற்றிவேந்தன் தொடங்கி வைத்து, பேசுகையில், காசநோய் அறிகுறிகளான தொடர் இருமல், விட்டு விட்டு காய்ச்சல், பசியின்மை, எடை குறைவு, சளியில் ரத்தம் வருதல் முதலிய அறிகுறிகள் உள்ளவர்களும், சர்க்கரை நோய், ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு முதலிய நாட்பட்ட நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு எக்ஸ்ரே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.

மேலும், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் இந்த நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் கிராமங்களுக்கு சென்று எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்படுவது குறித்து பேசினார். அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த பரிசோதனை முகாமில் 110 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டது.முன்னதாக காசநோய் சிறப்பு மருத்துவர் முகமது கலீல் முன்னிலை வகித்தார். காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் சிவகுமார் வரவேற்றார். முகாமில் காசநோய் மேற்பார்வையாளர்கள் ராஜேஷ், விஜயகுமார், தனசேகரன், ஆனந்தி, சத்யா, உமா மகேஸ்வரி, கிருஷ்ணா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: