பட்டுக்கோட்டை பகுதியில் ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை நிறுத்தம்

பட்டுக்கோட்டை, ஜன. 22: பட்டுக்கோட்டை பகுதியில் ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறை தினகரன் நாளிதழ் செய்தி எதிரொலியாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி முதல் பயோ மெட்ரிக் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி ஆரம்பித்த நாள் முதலே பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்குவதில் சர்வர் பிரச்சனையால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. பயோமெட்ரிக் முறையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர் அல்லது அந்த குடும்ப அட்டையில் பெயர் இருக்கக் கூடியவர்களில் யாராவது ஒருவர் கைரேகை வைத்தால் மட்டுமே பொருட்களை வாங்க முடியும்.

இந்நிலையில் தமிழக அரசு பொங்கல் சிறப்பு தொகுப்பாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் அரிசி, வெல்லம், கரும்பு மற்றும் ரூபாய் 2,500 ரொக்கம் ஆகியவை வழங்கியது. இதற்காக பயோமெட்ரிக் முறை ஜனவரி 4 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இருக்காது என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு சென்று உடனே பொருட்களையும், ரூபாய் 2,500 ரொக்கத்தையும் பெற்றனர். அதனைத் தொடர்ந்து பொங்கல் விடுமுறை 3 நாட்களை தொடர்ந்து கடந்த 18ம் தேதி முதல் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டது. 18 மற்றும் 19ம் தேதி 2 நாட்களுமே பட்டுக்கோட்டை தாலுகாவில் உள்ள சுமார் 190க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இது குறித்து தினகரன் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன், செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக பயோமெட்ரிக் முறையில் மிகுந்த தாமதம் ஏற்படுவதால் அதனை சரிசெய்யும்வரை தற்காலிகமாக பயோமெட்ரிக் முறை நிறுத்தப்படுகிறது. அதுவரை பழைய மாதிரி குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டை) ஸ்கேன் செய்து ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த தினகரன் நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.

Related Stories: