×

அரசு விழாக்களில் தொடர்ந்து புறக்கணிப்பு கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

கீழக்கரை, ஜன.22:  அரசு விழாக்களில் தங்களை புறக்கணிப்பதாக ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். திருப்புல்லாணி யூனியன் அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றியக்குழுக் கூட்டம் தலைவர் புல்லாணி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். ஆணையாளர் மல்லிகா வரவேற்றார். கணக்காளர் சரவணன் தீர்மானங்களை வாசித்தார். அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:

கவுன்சிலர் பைரோஸ்கான்: பெரியபட்டினம் கப்பலாற்றுப்பகுதி துார்வாரப்பட வேண்டும். ஜலால் ஜூம்மா பள்ளி முதல் முத்துப்பேட்டை வரை கடற்கரைச்சாலை மற்றும், தங்கையா நகரில் அங்கன்வாடி மையம் சேதமடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும். பொதுவாக அரசு விழாக்கள், பூமிபூஜை, கட்டடத்திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சி ஊராட்சிகளில் நடக்கும் போது ஒன்றியக் கவுன்சிலர்களை புறக்கணிக்கின்றனர். இதேபோல் கொசு மருந்து உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் போது எந்த தகவலும் கவுன்சிலர்களுக்கு தெரிவிப்பது கிடையாது.

வட்டார மருத்துவ அலுவலர் ராசிக்தீன் கூறுகையில், வரும் காலங்களில் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். மேலும் சுகாதாரத்துறை மேற்கொண்ட நடவடிக்கையால் திருப்புல்லாணி ஒன்றியத்தில் டெங்கு முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதாக தெரியவில்லை. துணைத்தலைவர் சிவலிங்கம்: ஒன்றிய தலைவருக்கே தகவல் தெரிவிக்காமல் ஒப்புதல் பெறாமல் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது எந்த வகையில் ஏற்றுக்கொள்வது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

உறுப்பினர் கருத்தமுத்து: காவிரி நீர் எங்கள் பகுதியில் பல மாதங்களாக சப்ளை இல்லை. தலைவர் புல்லாணி: அரசு அலுவலர்கள் எங்களுக்குத் தெரியாமல் பணிகளை மறைக்க கூடாது. வெளிப்படையான நிர்வாகம் வேண்டும் என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது. இறுதியில் அனைத்து தீர்மானங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஒன்றிய குழு தலைவர் புல்லாணி தெரிவித்தார்.

Tags : Councilors ,state ceremonies ,
× RELATED நகர்மன்ற கூட்டம் தொடர்பாக ஆலோசனை